மூளை ரத்தக்குழாய் வீக்கம் மூதாட்டிக்கு ரேலாவில் மறுவாழ்வு ரேலா மருத்துவமனை சாதனை

குரோம்பேட்டை: மூளை ரத்தக்குழாய் வீக்கத்திற்கு, 'இன்ட்ராசக்குலர்' என்ற கருவி மூலம் மணிக்கட்டு தமனி வழியாக சிகிச்சை அளித்து, ரேலா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

சென்னையை சேர்ந்த, 60 வயது மூதாட்டி ஒருவருக்கு, திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

நினைவற்ற நிலையில் இருந்த அவரை, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சேர்த்தனர். சி.டி., ஸ்கேன் மற்றும் டி.எஸ்.ஏ., பரிசோதனையில், மூளையின் வலது பக்கத்தில் ரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்தது.

மேலும், ரத்த நாளங்கள் இரண்டாக பிரியும் இடத்தில், அகலமான வாய் கொண்ட ஒரு பலுான் போன்ற வீக்கம் உருவானதே இதற்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது.

மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், மூளை ரத்த நாள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் முரளிதரன் வெற்றிவேல், மூத்த நரம்பியல் நிபுணர் நடேசன் தாமோதரன், மயக்கவியல் நிபுணர் ரமணன் ராஜகோபால் ஆகியோர் கொண்ட குழு, இன்ட்ராசக்குலர் கருவி மூலம், மணிக்கட்டு தமனி வழியாக அறுவை சிகிச்சை அளித்து, மூதாட்டியை காப்பாற்றினர்.

ரேலா மருத்துவ மனையின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா கூறியதாவது:

இந்தியாவிலேயே முதல் முறையாக, வெடித்து சிதறிய ரத்தக் குழாய் வீக்கத்திற்கு, மணிக்கட்டு வழியாக, வெப் கருவியை செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மூளை -நரம்பியல் சிகிச்சையில், இது ஒரு மைல்கல். தொடை தமனி வழியாக அணுகுவதை விட, கையின் மணிக்கட்டு வழியாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால், நோயாளி நீண்ட நாட்கள் நடமாட்டமின்றி படுக்கையில் ஓய்வில் இருக்க தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement