'டவுட்' தனபாலு

1

பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி: கூட்டணி அமைப்பதில், பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை. வெற்றி கூட்டணியை கண்டறிவதில் தான் சிக்கல்; அதனால் தான் தாமதமாகிறது. அனைத்து தரப்பிலும் பேச்சு நடத்தி வருகிறோம். இறுதி முடிவு வரும் வரை, வெளியில் சொல்வது நன்றாக இருக்காது.

டவுட் தனபாலு: 'நாங்க இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சியில் அமரும்'னு சொல்லாம அடக்கி வாசிக்கிறீங்களே... இதுல இருந்தே, உங்க கட்சி முழுக்க அன்புமணி வசம் போயிடுச்சு என்பதுடன், ராமதாசுடன், உங்களை போன்ற பழம் தலைவர்கள் மட்டும் தான் இருக்காங்க என்பதும், 'டவுட்'டே இல்லாம தெரியுதே!



தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை:
காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்ட ஐவர் குழு, முதல்வர் ஸ்டாலினிடம் தொகுதி பங்கீடு குறித்து ஒரு முறை பேச்சு நடத்தியுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி ராகுலுடன், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசியிருக்கிறார். பேச்சு தொடர்ந்து நடக்கிறது; சுமுகமான முடிவு வரும். காங்கிரஸ் தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் யாரும், த.வெ.க.,வுடன் பேசவில்லை. சிலரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, த.வெ.க.,வுடன் பேசி விட்டதாக கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைமை தெளிவாக உள்ளது.

டவுட் தனபாலு: ஆனாலும், '40 சீட்கள், மூன்று அமைச்சர் பதவிகள் வேண்டும்'னு ராகுல் அடம் பிடிக்கிறதா சொல்றாங்களே... அதனால, அதிகாரப்பூர்வமா தி.மு.க., தலைமையுடனும், அங்கீகரிக்கப்படாத நிர்வாகிகளை விட்டு, த.வெ.க.,வுடனும் பேசிட்டு இருக்கீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, தே.மு.தி.க.,வை விஜயகாந்த் துவக்கினார். அதை தெரிந்து கொண்டு, அக்கட்சி கூட்டணி முடிவை எடுக்கும் என நினைக்கிறேன். அ.தி.மு.க., கூட்டணிக்கு இன்னும் சிலர் வந்தாலும் ஏற்க தயாராக உள்ளோம். ஆனால், கூட்டணிக்காக மடிப்பிச்சை ஏந்தும் அளவுக்கு அ.தி.மு.க., பலவீனமாக இல்லை. 'எங்களால் தான் வெற்றி கிடைக்கும்' என்பவர்கள், இன்னும் ஆறு மாதங்கள் கழித்து கூட முடிவு எடுக்கலாம்.

டவுட் தனபாலு: அது சரி... 'நாங்க இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும்'னு தே.மு.தி.க.,வின் பிரேமலதா தான் ஜம்பமா சொல்லிட்டு இருக்காங்க... 'தேர்தல் முடிஞ்ச பிறகு முடிவு எடுங்க'ன்னு, அவங்களைத் தான் நீங்க கிண்டல் பண்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!



Advertisement