அ.தி.மு.க., மாவட்டச் செயலர் தொகுதிக்கு பா.ஜ., குறி!

1

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''அநேகமா, 'புதிய தமிழகம் கட்சி வந்துடும்'னு சொல்றாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''எந்த கூட்டணிக்கு போக போறாங்களாம்...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''மதுராந்தகத்தில், பிரதமர் மோடி கலந்துக்கிட்ட பிரசார கூட்டத்துலயே, புதிய தமிழகம் கட்சியும் கலந்துக்கும்னு பா.ஜ.,வினர் எதிர்பார்த்தாங்க... ஆனா, அவங்களிடம் முறைப்படி பேச்சு நடத்தாததால, அவங்க வரல பா...

''இந்த சூழல்ல, குடியரசு தினத்தை முன்னிட்டு, போன வாரம், கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்க... இதுக்கு வந்திருந்த தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், கிருஷ்ணசாமியிடம் 15 நிமிடங்கள் தனியா பேசி, அவரை சமாதானப் படுத்தி இருக்காரு பா...

''அப்பவே, தொகுதி பங்கீடு பத்தியும் பேசிட்டதா சொல்றாங்க... இதனால, 'தங்களது கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திட்டு, தே.ஜ., கூட்டணியில் சேரும் அறிவிப்பை, வர்ற 15ம் தேதிக்கு மேல கிருஷ்ணசாமி வெளியிடுவார்'னு பா.ஜ.,வினர் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''வழக்கை முடிக்க வசூல் நடந்திருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''தமிழகத்தில் வீடு, மனைகள் வாங்கறவா, பத்திரப்பதிவு ஆபீஸ்ல பதிவு பண்றால்லியோ... அங்கே, 'கவனிப்பு' இல்லாம எந்த காரியமும் நடக்காது ஓய்...

''அந்த வகையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் புகார், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது போன்ற புகார்கள்ல, 100க்கும் மேற்பட்ட சார் - பதிவாளர்கள், 'சஸ்பெண்ட்'ல இருக்கா... இவா மீதான வழக்குகளை விரைந்து முடிக்கும்படி, சார் - பதிவாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்திண்டு இருந்தா ஓய்...

''சமீபத்தில், 10 சார் - பதிவாளர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை மட்டும் ரத்து பண்ணியிருக்கா... ஆனா, மத்தவாளை கண்டுக்கல... இந்த, 10 பேரும் உயர் அதிகாரிகளுக்கு வேண்டியவான்னும், அதுல சிலர் பணம் குடுத்து, தங்களது சஸ்பென்ஷனை ரத்து பண்ணிட்டதாகவும் துறை ஊழியர்கள் பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மாவட்டச் செயலர் தொகுதிக்கு குறி வச்சிருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த கட்சியிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம், நாடு முழுக்க பரபரப்பாயிட்டுல்லா... இதனால, சட்டசபை தேர்தல்ல, இந்த தொகுதியில் போட்டியிட பா.ஜ.,வினர் ஆசைப்படுதாவ வே...

''இங்கே தங்களுக்கு, 100 சதவீதம் வெற்றி உறுதின்னும் நம்புதாவ... இங்கே, பா.ஜ., மாநில பொதுச் செயலர், ராம.சீனிவாசன் போட்டியிட தயாரா இருக்காரு வே...

''ஆனா, கூட்டணி கட்சியான, அ.தி.மு.க.,வின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலரான ராஜன் செல்லப்பா, இப்ப திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., வா இருக்காரு... அவர், தன் தொகுதியை தக்க வச்சுக்கிறதுல தீவிரமா இருக்காரு வே...

''இந்த ரெண்டு மலைகளுக்கு நடுவுல, பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவரான திருமாறனும் இங்க போட்டியிட, 'துண்டு' போட்டு வச்சிருக்காரு... இதுல, யாருக்கு முருகன் அருள் கிடைக்கும்னு தெரியல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement