ஹாக்கி உலக கோப்பைக்கு தகுதி * முன்னாள் கேப்டன் சவிதா நம்பிக்கை
புதுடில்லி: ''மோசமான உடற்தகுதி காரணமாக இந்திய அணியினர் கடந்த ஆண்டு சரியாக செயல்படவில்லை. இம்முறை சிறப்பாக செயல்பட்டு, உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு தகுதி பெறுவோம்,'' என சவிதா தெரிவித்துள்ளார்.
இந்திய பெண்கள் ஹாக்கி அணி, கடந்த 2025ல் சிறப்பாக செயல்படவில்லை. புரோ லீக் தொடரில் 16 போட்டியில் 10 புள்ளி மட்டும் பெற்று, வெளியேறியது. உலக கோப்பைக்கு (வரும் ஆக. 14-30, பெல்ஜியம், நெதர்லாந்து) நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
தற்போது புதிய பயிற்சியாளர் மரிஜ்னே தலைமையில், ஐதராபாத்தில் நடக்க உள்ள உலக கோப்பை தகுதிச்சுற்றில் (மார்ச் 8-14) பங்கேற்க உள்ளது. இதில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. 'டாப்-3' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு முன்னேறும்.
இதுகுறித்து முன்னாள் கோல்கீப்பர் சவிதா 35, கூறியது:
விளையாட்டில் ஏற்ற, இறக்கம் சகஜம் தான். கடந்த ஆண்டு எங்களுக்கு மோசமாக அமைந்தது. வீராங்கனைகளிடம் போதிய உடற்தகுதி ('பிட்னஸ்') இல்லாததது தான் முக்கிய காரணம். 'பிட்னஸ்' சரியாக இருந்ததால் தான், டோக்கியோ ஒலிம்பிக்கில் 4வது இடம் பெற்றோம்.
மீண்டும் தற்போது சறுக்கி விட்டோம். உலக கோப்பை தகுதிச்சுற்று மிக முக்கியம் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். இதில் வெற்றி பெற்று, உலக கோப்பைக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தவிர அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.