இந்திய அணி அசத்தல் வெற்றி * உலக கோப்பை பயிற்சியில்...
நவி மும்பை: உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய 'ஏ' அணி 38 ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்திய வீரர் ஜெகதீசன் 55 பந்தில் 104 ரன் விளாசினார்.
இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை (பிப். 7 - மார்ச் 8) 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள், நான்கு பிரிவுகளாக களமிறங்க உள்ளன. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் சவாலில் அமெரிக்காவை (பிப். 7) சந்திக்க உள்ளது.
இத்தொடருக்கு தயாராகும் வகையில் நேற்று பயிற்சி போட்டிகள் துவங்கின. நவி மும்பையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய 'ஏ' அணி, அமெரிக்காவை எதிர்த்து களமிறங்கியது. இளம் இந்திய வீரர்கள் இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற அமெரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.
திலக் வருகை
இந்திய 'ஏ' அணிக்கு தமிழகத்தின் ஜெகதீசன், பிரியான்ஷ் ஆர்யா ஜோடி வேகமான துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்த போது ஆர்யா (28) அவுட்டானார். ஆப்பரேஷன் காரணமாக நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத திலக் வர்மா, 24 பந்தில் 38 ரன் எடுத்து 'பெவிலியன்' திரும்பினார்.
ஜெகதீசன் அபாரம்
ஷாட்லே வீசிய 12வது ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஜெகதீசன், 50 பந்தில் சதம் எட்டினார். மறுபக்கம் ஷாட்லே ஓவரில் (16 வது) தொடர்ந்து 4, 6, 6 என விளாசினார் ஆயுஷ் படோனி. ஜஸ்தீப் ஓவரில் (18 வது) 6, 4, 6, 4 என ஆயுஷ் மிரட்ட, 22 ரன் கிடைத்தன. ஜெகதீசன் 55 பந்தில் 104 ரன் குவித்தார்.
இந்திய 'ஏ' அணி 20 ஓவரில், 238/3 ரன் குவித்தது. அரைசதம் அடித்த ஆயுஷ் (60 ரன், 26 பந்து), ரியான் பராக் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
பிஷ்னோய் '3'
கடின இலக்கைத் துரத்திய அமெரிக்க அணிக்கு மிலிந்த் குமார் (18), சஞ்சய் (41) சற்று உதவினர். கவுஸ் அதிகபட்சம் 44 ரன் எடுத்தார்.
கடைசி நேரத்தில் சுபம் (28), ஹர்மீட் சிங் (25), முகமது மோசின் (21) சற்று வேகமாக ரன் சேர்த்து ஆறுதல் தந்தனர். அமெரிக்க அணி 19.4 ஓவரில் 200 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3, கலீல் அகமது 2, நமன் திர் 2 விக்கெட் சாய்த்தனர்.
ஆப்கானிஸ்தான் அபாரம்
பெங்களூருவில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி (184/6), 61 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை (123/10, 19.3 ஓவர்) வீழ்த்தியது. ஓமர்சாய் 3, ஜியாவுர் ரஹ்மான், முகமது நபி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.