கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி மூன்று நாட்களில் 44% விலை வீழ்ச்சி

கடந்த மூன்று நாட்களில், எம்.சி.எக்ஸ்., எனும் மல்டி கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிவை கண்டு, புதிய உச்சத்தை தொட்டதில் இருந்து, 44 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளன.

கடந்த ஜன., 29ம் தேதி, 10 கிராம் தங்கத்தின் விலை 1,80,799 ரூபாயாக புதிய உச்சத்தை தொட்டது; நேற்று முன்தினம் 1,36,185 ரூபாயாக குறைந்தது. இது, 24.70 சதவீத சரிவாகும்.

இதே போன்று, 1 கிலோ வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு 4,20,048 ரூபாயாக புதிய உச்சத்தை தொட்ட நிலையில், நேற்று முன்தினம் 2,33,774 ரூபாயாக குறைந்துள்ளது. இது, 44.40 சதவீத சரிவாகும்.

தங்கம் விலை



கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக, 50 -நாள் நகரும் சராசரி நிலையை தொட்டுள்ளது. பொதுவாக விலை இந்த நிலைக்கு கீழே சென்றால், அது குறுகிய காலத்தில் சரிவு தொடர்வதை குறிக்கும்.


இது குறித்து, சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது: தங்கம் தன் முந்தைய உச்சத்தில் இருந்து கணக்கிடும் போது, 38.20 சதவீதம் சரிவை கண்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக விலை மீண்டும் உயர துவங்குவதற்கான ஒரு தற்காலிக ஓய்வு புள்ளியாக கருதப்படுகிறது.

எனினும், தங்கம் சில மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலையிலேயே வர்த்தகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விலை உயரும்பட்சத்தில், 1,80,779 ரூபாய்க்கு மேல் செல்வது கடினம். சரியும்பட்சத்தில், 1,36,185 மற்றும் 1,32,294 ஆகியவற்றுக்கு இடையே வர்த்தகமாக கூடும்.

இந்த நிலைக்கு கீழே சென்றால், 50 சதவீதம், அதாவது 1,24,400 ரூபாய் வரையும், அடுத்ததாக 61.80 சதவீத சரிவுடன், 1,11,080 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது.

தங்கத்தை விட ராக்கெட் வேகத்தில் 377 சதவீத உயர்வு கண்ட வெள்ளி விலை, எவ்வளவு வேகமாக உயர்ந்ததோ, அதை விட வேகமாக தற்போது 50 சதவீதம் சரிவை கண்டுள்ளது. இன்னும் கொஞ்சம் சரிந்து, 1 கிலோ வெள்ளி விலை 2,14,800- ரூபாயை தொட்டுவிட்டு மீண்டும் ஏற வாய்ப்புள்ளது.

அப்படி ஏறினாலும் 2,90,000 என்ற நிலையை தாண்டுவது பெரிய சவாலாக இருக்கும். குறுகிய காலத்தில் தங்கம், வெள்ளி விலை சரிவை கண்டாலும், முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால நோக்கில் தங்கம், வெள்ளி இன்னும் நல்ல லாபத்தை தரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

@block_B@

'உலகளாவிய நிச்சயமற்ற சூழலே காரணம்'

தங்கம் விலையில் நிலவும் ஏற்ற, இறக்கத்துக்கு உலகளாவிய நிச்சயமற்ற சூழலே காரணம். இது, முதலீட்டாளர்களுக்கு எந்தவொரு நாட்டின் கரன்சி மீது, நம்பிக்கை இல்லாமல் இருப்பதை காட்டுகிறது. பியூச்சர் மற்றும் ஆப்ஷன் வர்த்தகத்தில், சிறு முதலீட்டாளர்கள் அறியாமையால் பணத்தை இழப்பதை தவிர்க்கவே, பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.


- நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்.block_B

Advertisement