மூலதன ஆதாய வரி விலக்கு ரத்தால் தங்க பத்திரங்களின் விலை 10% சரிவு
பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்கப் பத்திரங்களுக்கான மூலதன ஆதாய வரி விலக்கு ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, தேசிய பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில், தங்கப் பத்திரங்கள் விலை, 10 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன.
கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்கப் பத்திரங்களை முதிர்வு காலம் வரை வைத்திருந்து, ஈட்டும் லாபத்துக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.
புதிய மாற்றம், வரும் ஏப்., 1 முதல் அமலுக்கு வரும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
புதிய விதிமுறை
* ரிசர்வ் வங்கியிடம் இருந்து நேரடியாக தங்கப் பத்திரங்களை வாங்கி, அது முதிர்வடையும் போது லாபத்தை பெறும் முதலீட்டாளருக்கு மட்டுமே, மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு கிடைக்கும்.
* பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்கப் பத்திரத்தை வாங்கி, அது முதிர்வடையும் போது ஈட்டும் லாபத்துக்கு, மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது.
பழைய விதிமுறை
முதலீட்டாளர்கள் நேரடியாக அரசிடம் இருந்தோ அல்லது பங்குச் சந்தையில் இருந்தோ.
தங்கப் பத்திரத்தை வாங்கியிருந்தாலும் முதிர்வடையும் வரை வைத்திருத்து லாபம் ஈட்டினால், மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு என விதிமுறைகள் பொதுவாக இருந்தன.
என்ன பிரச்னை?
இரண்டு முதலீட்டாளர்கள் ஒரே முதிர்வு தேதி கொண்ட தங்கப் பத்திரத்தை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். ஒருவர், ரிசர்வ் வங்கியிலிருந்து தங்கப் பத்திர வெளியீட்டின் போது வாங்கியவர் எனில், அவர் லாபத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. மற்றொருவர் பங்குச் சந்தையில் இருந்து வாங்கியவர் எனில், லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும்.
ஒரே பத்திரம், ஒரே முதிர்வு தேதி என்றாலும், வரி விதிப்பு வேறாகிறது.
சந்தை நிபுணர்கள் கருத்து
மூலதன ஆதாய வரி விலக்கு ரத்தானது, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் தங்கப் பத்திரங்கள் வாங்குவதை குறைக்கும்.
தற்போது தங்கப் பத்திரத்தில் கிடைக்கும் லாபமும், வீடு, பங்குகள் போன்ற முதலீட்டு சொத்துக்களிலிருந்து கிடைக்கும் லாபத்தைப் போலவே வரிக்கு உட்படுத்தப்படும். நேரடியாக தங்கம் வாங்குவது, தங்க இ.டி.எப்., ஆகியவற்றை விட, தங்கப் பத்திரங்கள் சிறந்த முதலீடாக கருதப்பட்டதற்கு மிக முக்கியமான காரணம், வரி இல்லாத லாபம் தான். தற்போது அந்த பலன் இல்லாததால், மற்ற தங்க முதலீடுகளுக்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லாத சூழல் உருவாகி உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும்
-
மும்பை விமான நிலையத்தில் உரசிய விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு
-
கால்பந்து: இந்தியா வெற்றி
-
தீர்ப்பு வழங்குவதை இழுத்தடிக்க கூடாது: உயர் நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
-
டெண்டர் முறைகேடில் யாரையும் பாதுகாக்கவில்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
-
மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்; முதல்வர் ஸ்டாலின்
-
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கோல்கட்டாவிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி