இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மிக பெரிய முடிவு; தேஜ கூட்டணி எம்.பி.க்களிடம் மனம் திறந்த பிரதமர் மோடி

2

புதுடில்லி: இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் என்பது மிக பெரிய முடிவு என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

டில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் பிரதமர் மோடி, அமெரிக்கா, இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எம்பிக்களிடம் பேசி உள்ளார். அப்போது இந்த ஒப்பந்தம் மிக பெரிய முடிவு, நாட்டில் உள்ள அனைவருக்கும் இது பயனளிக்கும், எப்போதும் நாட்டின் நலனுக்காக தமது அரசு செயல்படுகிறது என்று பிரதமர் மோடி பேசினார் என அக்கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி. ஒருவர் தெரிவித்து உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கூட்டத்திற்கு பின்னர் அதில் கலந்து கொண்ட எம்.பி.யும், அமைச்சருமான கிரண் ரிஜிஜூ கூறியதாவது; பிரதமர் மோடி தலைமையின் கீழ் 9 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. எம்பிக்கள் மத்தியில் இது மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மொத்தம் 39 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இந்த 39 நாடுகளுமே வளர்ந்த நாடுகள். இது வரலாற்று சிறப்புமிக்கது.

இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

சிவசேனா எம்.பி. மிலிந்த் தியோரா கூறுகையில், வர்த்தக ஒப்பந்தம், பட்ஜெட் என எதுவாக இருந்தாலும் அது நாட்டுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பிரதமர் மோடி எங்களிடம் விளக்கினார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் பெருமை பிரதமர் மோடியையே சாரும். அவரின் உறுதியின் காரணமாகவே இது நிகழ்ந்துள்ளது. சிறு வணிகர்களுக்கு இந்த ஒப்பந்தம் நன்மைகளை தரும்.

இவ்வாறு மிலிந்த் தியோரா கூறினார்.

சிவசேனா தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறுகையில், கூட்டத்தின் போது எம்பிக்கள் அனைவரும் பிரதமருக்கு வரவேற்பு தெரிவித்தோம். ஒப்பந்தம் மிக பெரும் திருப்புமுனை என்பதால் அதை நாங்கள் வரவேற்றோம் என்றார்.

Advertisement