இந்தியாவுடன் ஒப்பந்தம்: பிரிட்டன் பார்லி. குழு மகிழ்ச்சி

லண்டன்: இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ)விதிகள் சார்ந்த வர்த்தகத்திற்குப் பலம் சேர்ப்பதாகப் பிரிட்டீஷ் பிரபுக்கள் சபையின் சர்வதேச ஒப்பந்தங்கள் குழு தெரிவித்துள்ளது.
இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று பிரிட்டன் பார்லி குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.


பிரிட்டீஷ் பிரபுக்கள் சபை குழு வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா-பிரிட்டன் இடையேயான இந்த ஒப்பந்தம் மூலம் 2040ம் ஆண்டிற்குள் இரு தரப்பு வர்த்தகம் 2,76,675 கோடி ரூபாய் (£25.5 பில்லியன்)உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஜவுளி மற்றும் தோல் பொருட்களுக்கு பிரிட்டனில் வரி விலக்கு கிடைக்கும். அதேபோல், பிரிட்டனின் ஸ்காட்ச் விஸ்கி மீதான வரி 150%-லிருந்து 75%-ஆக குறைக்கப்படும்.


75,000 இந்தியப் பணியாளர்கள் பிரிட்டனின் சமூக பாதுகாப்பு வரி செலுத்துவதிலிருந்து 36 மாதங்களுக்கு விலக்கு பெறுவார்கள். இது இந்தியத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 4,513.5 கோடி ரூபாய் ( $500 மில்லியன் ) கிடைக்கப்பெறும்.
முதல்முறையாக, இந்தியாவின் 4,12,300 கோடி ரூபாய் (£38 பில்லியன் )மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்க பிரிட்டன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரிட்டனுக்கான முழுமையான பலன்கள் கிடைக்க 15 ஆண்டு வரை ஆகலாம், சேவைத் துறையில் கூடுதல் கவனம் தேவை.


இவ்வாறு பிரிட்டீஷ் பிரபுக்கள் சபை குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

Advertisement