பார்லி விதிகளுக்குட்பட்டு பேசுங்கள்; ராகுலுக்கு புத்திமதி சொன்ன மத்திய அமைச்சர்

7


புதுடில்லி: பார்லியில் பேசும்போது காங்கிரஸ் எம்பி ராகுல், முறையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று பார்லி விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான விவாதங்களில் பேச தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், பார்லியில் எந்தவொரு உறுப்பினரும் தன்னிச்சையாகப் பேச முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு பார்லி விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; ராகுலின் கடிதத்திற்கு நான் பதில் அளித்துள்ளேன். நாங்களும் அவருக்காகக் காத்திருந்து சோர்ந்து போய் விட்டோம். ஆனால் அவர் பேசுவதில்லை. விதிகளுக்குப் புறம்பாகப் பேசுவேன் என்று அவர் கூறுகிறார். நாங்கள் 2 நாட்கள் காத்திருந்தோம். மற்ற உறுப்பினர்களும் பேசுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அவர் தன்னிச்சையாகப் பேச முடியாது. பார்லியில் விதிகளுக்குட்பட்டு தான் பேச வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement