அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்படணும்; முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

36

விழுப்புரம்: என்னை பொறுத்தவரையில் அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில், ஒவ்வொருவரின் கனவுகளை சேகரிக்கும் விதமாக 'என் கனவு என் எதிர்காலம்' என்ற இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முடக்க சிலர் சுப்ரீம்கோர்ட் வரை சென்றார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. பல தடைகளையும் தாண்டி இந்த திட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது.

40 நாட்களில்



பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் சிக்கல்கள் இருந்தாலும் 40 நாட்களில் தீர்வு காணப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது மட்டுமல்ல. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் திராவிட மாடலின் நோக்கம்.

தமிழகத்தில் ஒவ்வொருவரின் குறைகள், தேவைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம். 'என் கனவு என் எதிர்காலம்' என்ற இணையதள​த்தை தொடங்கி வைத்துள்ளேன். அதில் உங்கள் கனவுகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

24 மணி நேரமும்…!



அரசு சேவைகள் மக்களுக்கு தடையில்லாமல் விரைவாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 30-40 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டது. என்னை பொறுத்தவரையில் அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்க கூடாது.



நிர்வாகம் எளிமையாகவும், நிறைவாகவும், வெளிப்படைத் தன்மையாகவும் செயல்பட வேண்டும். இதனை மனதில் வைத்து தான் மக்களான உங்களுக்கு எந்ததெந்த சேவைகள் எல்லாம் அதிகமாக தேவையோ, அதை எல்லாம் நீங்கள் வசிக்கும் இடத்திலேயே வழங்க முடிவு செய்தேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement