பிழைகள் மொழிக்கே சாபம்; தேர்தல் கமிஷனுக்கு அல்ல பார்லி.,யில் கமல் பேச்சு: புரிந்துகொள்வோர் புரிந்துகொள்க
புதுடில்லி: “எங்கள் ஓட்டுகளை செலுத்த விரும்புகிறோம். எழுத்துப்பிழைகள் மொழிகளுக்கு மட்டுமே சாபம். நவீன இலக்கியமும், இணையமும் கூட உள்ளடக்கத்திற்காக இவற்றை மன்னித்துவிடும். ஆனால், தேர்தல் கமிஷன் மன்னிப்பதில்லை. இ.சி., என்றால் 'இங்கிலீஷ் கோச்' இல்லை,” என ராஜ்யசபா எம்.பி.,யாக தன் முதல் உரையை நிகழ்த்தினார் கமல்ஹாசன்.
தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆன மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், சபையில் நேற்று ஆற்றிய முதல் உரையில் பேசியதாவது:
வரவிருக்கும் தேர்தல்களே எனது உடனடி கவலை. ஐயா, என் அவதானிப்புகளைக் கூற அனுமதியுங்கள். நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்து இதை எழுதினேன்.
இதை, எழுத்துப்பிழை சரிபார்க்கப்பட்ட செத்தும் வாழ்வோர் சரிதை என்று அழைக்கிறேன்.
நாங்கள் ஓட்டளிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் கமிஷனோ எங்கள் ஓட்டுரிமையை சரிபார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் பெயர்களில் உள்ள எழுத்துப்பிழைகளையும் முகவரிகளையும் சரிபார்க்கின்றனர், அதுவும் தவறாக.
எழுத்துப்பிழைகள் மொழிகளுக்கு மட்டுமே சாபம். நவீன இலக்கியமும், இணையமும் கூட உள்ளடக்கத்திற்காக இவற்றை மன்னித்துவிடும். ஆனால் தேர்தல் கமிஷன் மன்னிப்பதில்லை.
தேர்தல் கமிஷன் நிச்சயமாக இந்தப் பரவலுக்குத் துணை போகிறது. தமிழகத்தில் மட்டும் காகித அளவில் 1 கோடி பேர் உயிருடன் இருக்கும் பிணங்களாக மாற்றப்படக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
லோக்சபாவில் பேசப்பட்ட சில வார்த்தைகளால் எனக்கு ஆதங்கமும், கோபமும் ஏற்பட்டது. தமிழ், பிச்சை எடுக்கக் கூட உதவாதா? ஓரளவு உண்மைதான் தங்காய். ஒரு தெக்கத்தி அறிவுரை தங்காய்.
தமக்கென உங்கள் நிதியைத் திரட்ட ஆங்கிலத்தில், ஹிந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது. திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்கமாட்டான். அதுவும், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும், நாட்டையும் இந்தத் தமிழன் கமல் விற்கவே மாட்டான்.
இவ்வாறு அவர் பேசினார்.
@block_B@ நிதியமைச்சர் நிர்மலா மறுப்பு 'தமிழ் பிச்சை எடுக்க கூட உதாவது' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக கமல் தன் உரையில் பெயர் குறிப்பிடாமல் தாக்கி பேசினார். இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் மொழியை பற்றி நான் இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாக கமல் ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். கடந்த 2025 மார்ச்சில் லோக்சபாவில் நான் ஈ.வெ.ரா., அவர்களின் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினேன். அது என்னுடைய சொந்தக் கருத்து அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_B