பிப்., 7ல் பிரதமர் மலேஷியா பயணம்
புதுடில்லி: இந்தியா - மலேஷியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் 7ல் இரண்டு நாள் பயணமாக மலேஷியா புறப்படுகிறார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
பிரதமர் மோடி வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மலேஷியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 2024 ஆகஸ்டில் இந்தியா - மலேஷியா உறவு முழுமையான நீண்டகால உறவு என்ற நிலைக்கு உயர்ந்தது. அதன் பின் நடக்கும் முதல் பயணம் இது.
இந்த பயணத்தின் போது, மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த உள்ளார்.
வர்த்தகம், முதலீடு, ராணுவம், கடல் பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை முழுமையாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்பாக இந்த பயணம் அமையும். மேலும், எதிர்கால ஒத்துழைப்புக்கான பாதையை இரு தலைவர்களும் வகுப்பர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.