மணிப்பூர் முதல்வராக கெம்சந்த் பதவியேற்பு
இம்பால்: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி திரும்ப பெறப்பட்ட நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங், 62, முதல்வராக நேற்று பதவியேற்றார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 மே மாதத்தில், இட ஒதுக்கீடு தொடர்பாக கூகி - மெய்டி பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறியதில், 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் இயல்புநிலை படிப்படியாக திரும்பியது.
முதல்வராக இருந்த பா.ஜ., மூத்த தலைவர் பைரேன் சிங், கடந்த ஆண்டு பிப்., 9ல் திடீரென ராஜினாமா செய்தார். இதை யடுத்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
புதிய அரசு சட்டசபையின் பதவிக்காலம், 2027ல் முடிவடைய உள்ள நிலையில், புதிய அரசை அமைப்பது தொடர்பாக பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கடந்த சில நாட்களாக ஆலோசித்தது.
இதில், சிங்ஜமேய் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான யும்னம் கெம்சந்த் சிங் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, இம்பாலில் உள்ள லோக் பவனில் கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்த தே.ஜ., கூட்டணி, ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இந்நிலையில், ஜனாதிபதி ஆட்சியை திரும்பப் பெறுவதாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மதியம் அறிவித்தார். தொடர்ந்து, லோக் பவனில் பதவியேற்பு விழா மாலையில் நடந்தது.
அப்போது, மணிப்பூரின், 13வது முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் அஜய் குமார் பல்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
2 துணை முதல்வர்கள் கூகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் நெம்சா கிப்ஜென், டில்லியில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துணை முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் கூகி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் துணை முதல்வர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
அதே போல, நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த லோசி டிக்ஹோ, துணை முதல்வராக பதவியேற்றார். மேலும், பா.ஜ., மூத்த தலைவர் கோவிந்தாஸ் கொந்தவுஜம், தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.எச்.லோகன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.