சூரிய புயலின் ரகசியம் உடைந்தது

சூரியப் பிழம்புகள் பூமியை எட்டித் தொடுவது அரிய ஒளிக்காட்சிகள் மட்டுமல்ல. அவை செயற்கைக்கோள்கள் மற்றும் மின் வினியோகக் கட்டமைப்புகளை முடக்கும் பேராற்றல் கொண்டவை. பூமிக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்தத் தீப்பிழம்புகள், எங்கே, எப்படித் துவங்குகின்றன என்பது விண்வெளி ஆய்வாளர்களுக்குப் பல ஆண்டுகளாக பெரும் சவாலாகவே இருந்து வந்தது.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, நாசாவின் உதவியுடன் ஏவிய, 'சோலார் ஆர்பிட்டர்' விண்கலம், அண்மையில் சூரியனை மிக நெருங்கி ஆராய்ந்தது. அந்த ஆய்வில், சூரிய ஜுவாலை குறித்த புதிரை விடுவிக்கும் முக்கியத் தரவுகள் கிடைத்துள்ளன. சூரியப் பிழம்புகள் ஒரு ஒற்றை வெடிப்பாகத் துவங்குவதில்லை; மாறாக, சூரியனின் காந்தப்புலங்களில் ஏற்படும் சிறு மாற்றங்கள், ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வாக மாறி, பெரும் பிழம்பை உருவாக்குகிறது என்பதை இவ்விண் கலம் கண்டறிந்துள்ளது.

இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை, 'சோலார் ஆர்பிட்டர்' பதிவு செய்த இந்தத் துல்லியமான தரவுகள், வெறும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மையை விளக்கியுள்ளன. இந்த நுணுக்கமான புரிதல், எதிர்காலத்தில் சூரியப் புயல்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்கவும், அதன் வாயிலாக பூமியின் தொழில்நுட்பக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும் உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement