விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்

3

புதுடில்லி: '' அமெரிக்கா உடன் செய்யப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில், விவசாயிகள் மற்றும் பால்வளத்துறை தொடர்பாக எந்த சமரசமும் கிடையாது. விவசாயிகள் நலன் உறுதி செய்யப்பட்டு உள்ளது,'' என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.


இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. அது விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.

உறுதி



இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். வெளிநாட்டு பொருட்கள் இந்திய சந்தைக்கு திடீரென வராது. இந்திய விவசாயிகள் பாதிக்கும் வகையில், எந்த சந்தையும் திறந்துவிடப்படாது. முக்கியமான பயிர்கள், உணவு தானியங்கள், சிறு தானியங்கள், பழங்கள் மற்றும் பால் பொருட்கள் சந்தை பாதுகாக்கப்படும். அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை.


உள்நாட்டு விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் இந்திய சந்தையை மத்திய அரசு திறந்துவிடாது. இந்தியாவுக்கு விவசாய பொருட்கள் ஏற்றுமதி தொடர்பாக அமெரிக்க அமைச்சர் கூறிய கருத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பார்லிமென்டில் விளக்கம் அளித்துவிட்டார். முக்கிய விவசாய பொருட்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ஏற்றுமதி அதிகரிப்பு



அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. சமீபத்தில் 63 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறை ஏற்றுமதியில் ஏற்படும் முன்னேற்றம், கோடிக்கணக்கான பருத்தி விவசாயிகளுக்கு உதவும். இந்திய விவசாயிகளுக்கு புதிய சந்தைகள் அணுகும் வசதி கிடைக்கும்.


வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ளது குறித்து உரிய நேரத்தில் விளக்கமளிக்கப்படும். இந்திய விவசாயிகளின் நலன் முற்றிலும் பாதுகாக்கப்படும் என்பது முக்கியமான கொள்கை என்றும் மாறாதது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement