எனக்கு சவக்குழி தோண்ட முயற்சி: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

18

புதுடில்லி: '' எதிர்க்கட்சியினர் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர். இது என் மீதான அவர்களின் வெறுப்பைக் காட்டுகிறது,'' என பிரதமர் மோடி கூறினார்.


ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது:

அழுத்தம்



நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் மோசமாக செயல்படுகின்றன. ஊடுருவல்காரர்களை அனுமதிக்கின்றனர். ஊடுருவல்காரர்கள் பழங்குடியினரின் நிலங்களை பறித்துக் கொள்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை திரிணாமுல் ஆதரிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரு கொடூர அரசின் வீழ்ச்சியில் அனைத்து சாதனைகளையும் படைத்து வரும் அக்கட்சி எங்களுக்கு பாடம் எடுக்கிறது. மேற்கு வங்க மக்களின் எதிர்காலம் இருளில் மூழ்கி உள்ளது. அதனைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.


அதிகாரத்தில் இருப்பதைத் தவிர அவர்களுக்கு எந்த லட்சியமும் இல்லை. அவர்கள் இங்கே உபதேசம் செய்கிறார்கள். சட்டவிரோதமாக குடியேறியவர்களை பணக்கார நாடுகள் வெளியேற்றுகின்றன. ஆனால், நமது நாட்டில் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றங்களில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

சாதனை



காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் கடனில் மூழ்கியிருந்தன. வாராக்கடன் அதிகமாக இருந்தது. தற்போது வங்கிகள் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றன. 30 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன் கொடுத்துள்ளோம்.

வங்கிகளின் வாராக்கடன் 1 சதவீதத்துக்கு கீழ் குறைந்துவிட்டன. வங்கிகளின் லாபம் உச்சத்தை அடைந்துள்ளது. வங்கித்துறையின் எதிர்காலம் கருதியே புத்திசாலித்தனமாக சீர்திருத்தங்களை மேற்கொண்டோம். காங்கிரஸ் ஆட்சியில் படுபாதாளத்தில் இருந்த பொதுத்துறை வங்கிகள் எங்கள் ஆட்சியில் சாதித்துள்ளன.


எல்ஐசி, எச்ஏஎல், எஸ்பிஐ குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல் தெரிவித்து பொது மக்களை திசைதிருப்பின. தற்போது இந்த 3 பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்கி வருகின்றன. சிறு விவசாயிகள் பற்றி முந்தைய அரசுகள் கவலைப்பட்டது இல்லை. மத்தியில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது அவர்களின் பைகளை மட்டும் நிரப்பின.

தீய எண்ணம்



காங்கிரஸ் ஆட்சியில் கண்டு கொள்ளப்படாத சிறு விவசாயிகளுக்காக 4 லட்சம் கோடி ரூபாயில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளின் தேவைகளை காங்கிரஸ் புறக்கணித்தது. சர்தார் சரோவர் அணை திட்டத்தை நிறைவேற்றாமல் இருந்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் தீய எண்ணத்தை புரிந்து கொள்ள முடியும்.

திட்டக்குழு கலைப்பு



கொள்கைகள் அமல்படுத்துவது குறித்து சில எம்பிக்கள் கேள்விகளை எழுப்பினர். ஆனால், சில உண்மைகளை இங்கு சொல்ல விரும்புகிறேன். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா , காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை பற்றி நன்கு தெரிந்தும் அதனை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவரது தந்தை உருவாக்கிய திட்டக்குழுவை இந்திரா கலைத்தார். நாங்கள் 2014ல் ஆட்சி அமைத்த பிறகு திட்டக்குழுவை அமைத்து நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினோம். இந்த அமைப்பு வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.


நான் அசாமைப் பற்றி பேசுகிறேன். தேர்தலுக்காக இதனை பேசவில்லை. எதிர்க்கட்சி தோல்வி காரணமாக இதைப் பற்றி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸ் கற்பனை மட்டும் செய்தது. அமல்படுத்துவதில் பின்தங்கியது. போகிபீல் அணை திட்டம் பல ஆண்டுகளாக அசாமில் தடைபட்டு கிடந்தது. வளர்ச்சியின் பாதையை கருத்தில் கொண்டு, நாங்கள் அதனை விரைவுபடுத்தி நிறைவேற்றினோம்.


எம்பி ஒருவர் பல விஷயங்களை சொல்லி கொண்டுள்ளார். அவரது அரசு மதுவில் மூழ்கி கிடக்கிறது. அவருடைய இளவரசர் ஒவ்வொரு வீட்டிலும் வெறுப்புக்கு ஒரு காரணமாகிவிட்டார்.

வெறுப்புணர்வு



காங்கிரசின் இளவரசர், நேற்று இந்த அவை எம்பி ஒருவரை துரோகி என்றார். காங்கிரசை விட்டு சென்ற யாரையும் அவர் அப்படி கூறியது இல்லை. சீக்கியர் என்பதால் நேற்று அந்த எம்பியை துரோகி என்கிறார். இது சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்.


சீக்கியர்கள் மீது காங்கிரஸ் கட்சியின் வெறுப்புணர்வை அம்பலப்படுத்தி உள்ளார். அந்த எம்பி, நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர். அரசியல் கொள்கையை மாற்றியதால், அவர் துரோகி ஆகிவிடுவாரா? இது சிறிய வார்த்தை இல்லை. குடிமகன் ஒருவரை துரோகி என சொல்வதை எப்படி நாடு சகித்து கொள்ளும்? இது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது.

அரசியல் விரோதம்



ராஜ்யசபா எம்பி சதானந்த மாஸ்டரின் கால்கள் துண்டிக்கப்பட்டதற்கு அரசியல் விரோதமே காரணம். 'அன்பின் கடை' பற்றி பேசுபவர்கள், 'மோடியே உன் சவக்குழி தோண்டப்படும்' என்பன போன்ற முழக்கங்களை எழுப்புகின்றனர்.

அவர்கள் மோடிக்கு சவக்குழி தோண்டுவது பற்றி பேசுகிறார்கள். இது வெறும் முழக்கம் மட்டும் அல்ல. என் மீதான வெறுப்பைக் காட்டுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ம் சட்டப்பிரிவை நீக்கினோம். பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை ஒழித்தேன். இடதுசாரி தீவிரத்தை ஒழித்தேன். இதனால் எதிர்கட்சியினர் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர்.

ஏமாற்றம்



பிரதமர் பதவி அரச குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது என காங்கிரஸ் நினைக்கிறது.
காங்கிரசின் முதல் குடும்பத்திற்கு நாடுபல தசாப்தங்களாக வாய்ப்பு அளித்தது. ஆனால், அவர்கள் வறுமையை ஒழிப்போம் போன்ற முழக்கங்களை எழுப்பி மக்களை தவறாக வழிநடத்தினர். அக்கட்சி ஒருபோதும், ஸ்டார்ட் அப் கலாசாரத்தை ஊக்குவிக்கவில்லை. அவர்களால் தங்கள் சொந்த ஸ்டார்ட் அப்பைக் கூட உயர்த்த முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement