சசி தரூர் மகன் உட்பட 300 பேரை பணி நீக்கம் செய்தது வாஷிங்டன் போஸ்ட்!

10

நமது நிருபர்




அமெரிக்காவின் பிரபல நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் மகன் இஷான் தரூர் உட்பட 300 பேர் வேலை இழந்துள்ளனர்.


தி வாஷிங்டன் போஸ்ட் என்பது அமெரிக்க நாளிதழ். 150 ஆண்டு காலமாக வெளியாகி வரும் இந்த இதழ் அமெரிக்க அரசியல் வரலாற்றில் தனி முக்கியத்துவம் கொண்டது. வாஷிங்டன், மேரிலாந்து, வர்ஜீனியா பகுதிகளில் இருந்து இதன் பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.


விளையாட்டு செய்திப்பிரிவு, பல நாடுகளில் செயல்பட்ட சர்வதேச செய்திப்பிரிவுகள், புத்தகம் தொடர்பான பிரிவுகள், கெய்ரோ, ஜெருசலேம், உக்ரைன், இந்தியா, வளைகுடா நாடுகளில் செயல்பட்ட செய்திப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. மொத்தம் 300 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

அவர்களில், 10 ஆண்டுக்கு மேலாக சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்த இஷான் தரூரும் ஒருவர். இவர், காங்கிரஸ் எம்.பி., சசி தரூரின் மகன்.
பத்திரிகை அலுவலகத்தின் செய்தி அறை காலியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இஷான் தரூர், 'இன்று மோசமான நாள்' என்று வேதனை தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நான் வாஷிங்டன் போஸ்டிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன், பெரும்பாலான சர்வதேச செய்திப்பிரிவு ஊழியர்கள் பணியை இழந்துள்ளனர்.


கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக எனது நண்பர்களாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களுடன் நானும் மனம் உடைந்தேன். அவர்களுடன் பணியாற்றியது ஒரு மரியாதையாக கருதுகிறேன். இவ்வாறு இஷான் தரூர் கூறியுள்ளார்.

அமேசான் உரிமையாளர்



அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பீஜோஸ் தான், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், 2013ம் ஆண்டு 250 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு, இந்த நிறுவனத்தை கிரஹாம் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கினார். கடந்த 2 ஆண்டுகளாக, செய்திப்பிரிவு ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும், நிறுவன உரிமையாளரான ஜெப் பீஜோஸ் தரப்பினருக்கும் மோதல்கள் இருந்து வந்தன.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும்போது, முன்னணி நாளிதழ்கள், ஊடக நிறுவனங்கள், அதிபராக தகுதியானவர் இவர் என்று முடிவு செய்து ஒருவரை அறிவிப்பது வழக்கம். வாஷிங்டன் போஸ்ட் இதழும், ஒவ்வொரு தேர்தலின்போதும், அவ்வாறு அறிவித்து வந்தது.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலின்போது, இத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடக்கூடாது என்று நிறுவன உரிமையாளர் ஜெப் பீஜோஸ் தடுத்து விட்டார். இந்த விவகாரம், அமெரிக்க பத்திரிகையுலகில் வெகுவாக விவாதிக்கப்பட்டது. வாஷிங்டன் போஸ்ட் இதழின் முடிவை எதிர்த்து 2 லட்சம் பேர், தங்கள் டிஜிட்டல் சந்தாவை ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்டர்கேட் ஊழல்



அமெரிக்காவின் இரு முன்னணி நாளிதழ்களில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட், 1974ம் ஆண்டு வாட்டர்கேட் ஊழலை அம்பலப்படுத்தியது. ஜனநாயகக்கட்சி அலுவலகங்களில் ஒட்டு கேட்பு கருவிகளை ரகசியமாக வைத்து, அவர்களது செயல்பாடுகளை கண்காணித்த இந்த விவகாரம், அமெரிக்க அரசியலில் பூதாகரமாக வெடித்தது.


தவறுக்கு பொறுப்பேற்று, அப்போதைய அதிபர் ரிச்சர்டு நிக்சன் ராஜினாமா செய்தார். இதற்கு வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஆதாரபூர்வமான கட்டுரைகளே காரணம். இன்றும் உலகளவில், புலனாய்வு செய்திகளுக்கு முன் உதாரணமாக கூறப்படுவது, வாஷிங்டன் போஸ்ட் இதழ் வெளியிட்ட வாட்டர்கேட் ஊழல் கட்டுரைகளே.

@block_P@

நடவடிக்கை ஏன்?

எக்சிகியூட்டிவ் எடிட்டர் மேட் முர்ரே ஊழியர்கள் மத்தியில் பேசுகையில், 'தற்போது நிறுவனம் சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டுமெனில் இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை. தொழில்நுட்ப மாற்றம், வாசிப்பு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், வருவாய் குறைவு போன்றவற்றை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என்று கூறியுள்ளார்.block_P

Advertisement