வெளிநாடுகளில் இருந்தும் 'ஆர்டர்' வருகின்றன!
சமூக வலைதளங்களை பயன்படுத்தி, தன் தாத்தாவின் நெசவு தொழிலுக்கு வெளிநாடுகளிலும் விற்பனை வாய்ப்புகளை உருவாக்கிய சேலம் மாவட்டம், காக்கபாளையத்தை சேர்ந்த கல்லுாரி மாண வர் பிரவீன்: நான், சமூக வலைதளங்களில் காணொலிகளை பதிவிட்டு வருகிறேன். ஒருமுறை தாத்தாவை பார்க்க வந்தபோது, தாத்தாவுடைய நெசவு தொழில் குறித்தும் காணொளிகளை பதிவிட்டேன்.
முதல் காணொலி பதிவிட்ட அன்றே, 20,000க்கும் மேற்பட்டோர் அதை பார்த்ததுடன், 100 வியாபார ஆர்டர்களும் கிடைத்தன. எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
திடீரென, 100 ஆர்டர் வந்ததால், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சில நெசவாளர்களையும் ஒருங்கிணைத்து, 100 ஆர்டரையும் சரியாக முடித்து, சொன்ன நேரத்துக்கே அனுப்பி வைத்தோம்.
நாட்கள் ஆக ஆக, சமூக வலைதளம் வாயிலாக நிறைய ஆர்டர் வரத் துவங்கின. நண்பர்கள் சிலரின் உதவியுடன், 'தாத்தாஸ் குளோத்திங்' என்ற பெயரில் வலைதளத்தை பதிவு செய்தோம். இப்போது ஆர்டரை கையாளுவது மிக எளிதாக உள்ளது.
மக்களும் நம்பிக்கையுடன் பணம் செலுத்தி, ஆர்டர் செய்கின்றனர். என் தாத்தா மட்டும் அல்லாமல், சுற்று வட்டாரத்தில் கிட்டத்தட்ட, 15 நெசவாளர்களை ஒருங்கிணைத்து, ஆர்டரை செய்து கொடுக்கிறோம்.
மக்கள் நேரடியாக ஆர்டர் செய்வதால், வழக்கத்தைவிட இரு மடங்குக்கு மேல் நெசவாளர்களுக்கு லாபம் கிடைக்கிறது.
குறுகிய காலத்திலேயே கிட்டத்தட்ட, 800க்கும் மேற்பட்ட ஆர்டர் வந்திருக்கின்றன. வெளிநாட்டு ஆர்டரும் வருகின்றன.
பிரான்ஸ், கனடா நாடுகளில் இருந்தும், 'தாத்தா கையால் நெசவு செய்த புடவைகள் வேண்டும்' என, பலரும் கேட்கின்றனர்.
என் தாத்தாவை உலகெங்கும் இருக்கும் தமிழர்களில் பலரும், தங்கள் தாத்தாவாக பார்க்கின்றனர்.
தாத்தாவின் நெசவை உணர்வுபூர்வமாக எடுத்துக் கொண்ட மக்களும், இவர்களை எங்களுடன் இணைத்த சமூக வலைதளங்களும் தான், எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம்.
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். வீட்டிலேயே ஒரு கடை உருவாக்கும் வேலையும் நடந்து வருகிறது.
பிரவீனின் தாத்தா, 85 வயதான சின்னசாமி: நெசவுத் தொழில் எனக்கு உணர்வுடன் கலந்த விஷயம். என் பேரன் தான் என்னை வெளி உலகுக்கு கொண்டு வந்து உள்ளான்.
வெளியூரில் இருப்போர் கூட, என்னை நலம் விசாரிக்கின்றனர்; மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
மேலும்
-
திருவள்ளூரில் 13 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
-
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது: நேபாளத்தில் பயணிகள் 13 பேர் பலி
-
திருப்பூரில் விநாயகர் கோவிலை சேதப்படுத்திய மர்ம ஆசாமி
-
இலவச பஸ் பாஸ் எண்ணிக்கை உயர்வு
-
பார்வையற்றோர் பள்ளி மாணவி கொலை? திருச்சி எஸ்.பி., விசாரிக்க உத்தரவு
-
மணல் திருட்டு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்