தலைவிரித்தாடும் பஞ்சம்: 42 லட்சம் பேர் பட்டினி

1

கெய்ரோ: சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் 42 லட்சம் பேர் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என உலகளாவிய பசி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட ஆப்ரிக்க நாடான சூடானில் மூன்று ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் தேசிய ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை ராணுவப் படைக்கும் இடையேயான அதிகார மோதல் காரணமாக அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

ஆர்.எஸ்.எப்., படைகள் சமீபத்தில் டர்பூர் மாகாணத்தின் முக்கிய பகுதியான எல் பஷாரை கைப்பற்றியது. இதனால் லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு நகரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனால் அங்கு உணவு உற்பத்தி மற்றும் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டர்பூரில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை ஆதரவுடன் இயங்கும் உலகளாவிய பசி கண்காணிப்பு அமைப்பு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடக்கு டர்பூரில் உள்ள உம் பாரு மற்றும் கெர்னோய் என்ற இரு நகரங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உம் பாரு நகரத்தில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் 52.9 சதவீதம் பேரும், கெர்னோயில் 34 சதவீத குழந்தைகளும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் தகவல்படி, 2025ல் குழந்தைகள் மற்றும் பெண்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு 37 லட்சமாக இருந்துள்ளது. இது 2026ல் 42 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement