இரவு முழுதும் திகிலுாட்டிய தீயில் 1,000 வீடுகள் சாம்பல்
மணிலா: பிலிப்பைன்சின் பொங்காவோ தீவில் இரவு நேரத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத தீ விபத்தில், 1,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் சாம்பலாகியுள்ளன.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் நுாற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். அங்கு தவி தவி மாகாணத்தில் உள்ள பொங்காவோ தீவில், கடந்த 3ம் தேதி இரவில் தீ விபத்து ஏற்பட்டது.
வலுவான காற்று வீசியதால் தீ மளமளவென பரவி அங்கிருந்த வீடுகளில் பற்றியது. பெரும்பாலும் மரம் மற்றும் லேசான பொருட்களால் கட்டப்பட்ட வீடுகள் என்பதால் முழுதுமாக எரிந்து சாம்பலானது.
தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் அதற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. இதனால் 5,000 பேர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பொங்காவோ நகரில் பேரழிவு நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.