மணல் திருட்டு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே துாதையில் சட்டவிரோத மணல் திருட்டு குறித்து சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

திருப்புவனம் புதுார் சின்னமாரி தாக்கல் செய்த பொதுநல மனு: துாதையில் குறிப்பிட்ட சர்வே எண்கள் மற்றும் அதை சுற்றிலும் உள்ள நிலத்தில் சிலர் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். விற்பனை செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துகின்றனர். அந்நிலத்தில் எதிர்காலத்தில் விவசாயம் செய்ய முடியாது.



பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வரத்து கால்வாயை சேதப்படுத்தி சாலை அமைத்துள்ளனர். கனிமவளத்துறை இயக்குனர், கலெக்டர், திருப்புவனம் தாசில்தாருக்கு புகார் அனுப்பினேன். ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் கமிஷனரை நியமிக்க வேண்டும். மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். சி.பி.ஐ.,விசாரணை நடத்தி மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.



நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆஜரானார். நீதிபதிகள் கனிமவளத்துறை செயலர், இயக்குனர், கலெக்டர், தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மார்ச் 23க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement