மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; புதிய ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பதற்றம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குகி பழங்குடியினர் நடத்திய ஊர்வலத்தில் தாக்குதல் நடந்தது. அதன் பிறகு குகி, மெய்தி இன மக்கள் இடையே மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். கலவரத்தில் 260க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர். இரு தரப்பை சேர்ந்த ஆயுதக்குழுக்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பைரேன் சிங் தலைமையிலான பாஜ அரசு ஆட்சியில் இருந்து விலகியது.
அங்கு சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது. உடனடியாக ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. முதலில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலும் 6 மாதங்களுக்கு அது நீட்டிக்கப்பட்டது. கலவரம், வன்முறை ஓய்ந்த நிலையில் மீண்டும் அரசு அமைக்கும் முயற்சியில் பாஜ ஈடுபட்டது. மெய்தி, குகி இனங்களை சேர்ந்த பாஜ எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களிடம் இது பற்றி பாஜ மேலிட பொறுப்பாளர் பிஎல் சந்தோஷ் கருத்து கேட்டார். பின்னர் டில்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மணிப்பூர் பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.
முதல்வர் பொறுப்பை ஏற்கும் வகையில், சட்டசபை தலைவராக ஒய்.கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். குகி பழங்குடி இனத்தை சேர்ந்த மாஜி பெண் அமைச்சர் நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக தேர்வானார். பிறகு அவர்கள் பதவியேற்று கொண்டனர். இந்த சூழலில் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. ''நிலைமையை கண்காணித்து வருகிறோம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என மாநில அரசு தெரிவித்துள்ளது.
குகி சமூகத்தை சேர்ந்தவர்கள், பாஜ தலைமையிலான குறிப்பாக மெய்தி தலைமையிலான அமைச்சரவையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குகி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர். போராட்டக்காரர்கள் டயர்களுக்கு தீ வைத்ததோடு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு கவர்னர் கடிதம்
-
கூட்டணியை விட கொள்கையே முக்கியம்: சொல்கிறார் கமல்
-
ஆர்ஏசி டிக்கெட் ஒதுக்கப்பட்டால் பயணிகளுக்கு பாதி கட்டணம்; பார்லி. குழு பரிந்துரை
-
யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம்: இந்திய அணி 411 ரன் குவிப்பு
-
விவசாயி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்; அதிகாரி கைது
-
ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்
Advertisement
Advertisement