ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம்; ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியது திமுக; நயினார் நாகேந்திரன் திடுக்

37

திருநெல்வேலி: தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 வழங்கும் நோக்கில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி வீதம் திமுக அனுப்பி உள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
கல்வியில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது கஞ்சா நிறைந்த மாநிலமாக மாறி உள்ளது. ஆளும் திமுக அரசு தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. திறமை இல்லாத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கழித்தே வழங்கத் தொடங்கினர். பொங்கலுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.3,000 வழங்கியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அந்த உதவி வழங்கப்படவில்லை. தேர்தல் வருவதால்தான் இந்த ஆண்டு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.20 கோடி




இதேபோல், தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 வழங்கும் நோக்கில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தி.மு.க நம்புகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் வழக்கில் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. சாத்தான்குளம் இரட்டை காவல் மரண விவகாரத்தில் தி.மு.க.வினர் போட்டி போட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் தி.மு.க ஆட்சிக் காலத்தில் இதுவரை 33 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன.

டப்பா இன்ஜின்




அதையெல்லாம் மறைக்க தி.மு.க.வினர் 'டப்பா இன்ஜின்' என போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
மத்திய பட்ஜெட் மிகச் சிறப்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் கோடிக்கு செமி கண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன.

விசில் அடிக்க...




கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பர். இங்கிருந்து கனிம வளங்களை எடுத்துச் சென்று, அங்கிருந்து கழிவுகளை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். விஜய்க்கு விதிக்கப்பட்ட வரி அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவர் ஊழல் செய்ய மாட்டேன் என கூறி வந்தார். இப்போது விஜய்க்கு எதிராக விசில் அடிக்கத் தொடங்கியுள்ளோம். இனி ஒன்றிணைந்து அவருக்கு எதிராக டிரம் அடிப்போம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Advertisement