இலவச பஸ் பாஸ் எண்ணிக்கை உயர்வு

திருப்பூர்: கோவை கோட்டத்தில் கடந்தாண்டு 7.5 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசுப் போக்குவரத்து கழகம் வாயிலாக இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர் வாயிலாக பட்டியல் தயாரிக்கப்பட்டு, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, மேலாண்மை இயக்குனரிடம் ஒப்புதல் பெறப்படும்; அதன் பின் பாஸ் வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

தாமதம் ஏற்படுவதால், பாதி கல்வியாண்டுக்கு பின்பே பஸ் பாஸ் மாணவ, மாணவியர் கையில் கிடைத்தது. இந்நிலையில், 2025-26ம் கல்வியாண்டில் கல்வித்துறையின் எமிஸ் தள தரவுகளை பெற்று, அதன் வாயிலாக ஆன்லைன் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டு, பஸ் பாஸ் ஒப்புதல் வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இதனால், பணிகள் எளிமையானதுடன், பஸ் பாஸ் பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன்படி, 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 60 லட்சம் மாணவ, மாணவியருக்கு மாநிலம் முழுதும் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கோவை கோட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டத்தில், 7.5 லட்சம் பள்ளி பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டுகளில், நான்கு லட்சம் பேர் வரை மட்டுமே பஸ் பாஸ் வழங்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''வரும் கல்வியாண்டிலும், இந்நடைமுறை பின்பற்றி, பஸ்பாஸ் வழங்கப்பட உள்ளது,' என்றனர்.

Advertisement