அம்மாவின் அர்ப்பணிப்பில் ஓர் ஐ.ஏ.எஸ்.,!
அ ந்த குழந்தைக்கு கேட்கும் திறன் இல்லை; அதனால் பேச வராது. அம்மாவே ஆசிரியராக மாறி பேசக் கற்று தந்தார். குழந்தை வளர, வளர குரலுக்குள் வார்த்தைகளையும் வளர வைத்தார். தாய் மொழி தமிழின் அத்தனை அழகையும், தாய் சொல்லித்தர அவன் தமிழ் இலக்கியத்தை கசடற கற்றான். தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ்., வென்றான்.
இப்போது 'அவன்' அல்ல 'அவர்'... டி.ரஞ்சித் ஐ.ஏ.எஸ்.,! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட இயக்குனராக பணிபுரிகிறார்.
'அ, ஆ...' கூட சொல்லத்தெரியாமல் இருந்த சிறுவன், ஐ.ஏ.எஸ்., ஆனதில் அம்மா அமிர்தவல்லியின் அர்ப்பணிப்பு அளப்பரியது.
எதையும் கற்க தகுதிஇல்லாதவன் என்று ஆசிரியர் களால் புறந்தள்ளப்பட்ட சிறுவனை 'தாமஸ் ஆல்வா எடிசனாக' உலகிற்கு தந்த அவரது தாய் நான்சி எடிசன் போன்று போற்றத்தக்கவர் இந்த அமிர்தவல்லி.
கலெக்டரா ஆக்கப்போற?
அன்று பேச இயலாத சிறுவனின் வெற்றியை இன்று உலகம் பேசுவது எப்படி. அன்று காது கேட்காத சிறுவனின் சாதனையை இன்று உலகம் காது கொடுத்து கேட்பது எப்படி...?
ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம், அமிர்தவல்லி தம்பதியின் இரண்டாவது மகன் ரஞ்சித்.
ரஞ்சித் பிறக்கும் போதே காது கேட்காத, அதனால் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. மருத்துவ ரீதியாக 95 சதவீத குறைபாடு. ரஞ்சித்திற்கு இரண்டரை வயதான போது, குறைபாட்டினை உணர்ந்த பெற்றோர், கோவையில் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.
'காது கேளாத பையனை கோவைக்கு அழைத்துப்போய் என்ன கலெக்டரா ஆக்கப்போற' என்று உறவினர்களின் ஏளனத்தை கண்டுகொள்ளாமல் தாய், மகனுக்காக கோவைக்கு குடிபெயர்ந்தார். தந்தை பணி நிமித்தமாக ஈரோட்டில் தங்க வேண்டி இருந்தது. இன்னொரு குழந்தை பாட்டி வீட்டில் வளர்ந்தது.
கோவையில் சக்தி நிறுவனத்தின் ஆதரவில் நடக்கும் கஸ்துார்பா காந்தி செவித்திறனற்றோருக்கான பள்ளியில் மகனை சேர்த்தார் தாய்.
பேச்சு பயிற்சி
பேசுபவரின் உதடு அசைவதை வைத்து இங்கு பேச பயிற்சி தருவர். முதலில் பெரிய முன்னேற்றம் இல்லை என்று வருத்தப்பட்டாலும், தாய் சோர்ந்து போய் நின்றுவிடவில்லை. அவன் 'ஆப்பிள்' என்று மென்மையாக அரைகுறையாக சொல்ல, ஊக்கம் பெற்ற அந்த அம்மா ஆனந்த கூத்தாடினார். முயற்சி செய்தால், தொடர் பயிற்சியும் இருந்தால் மகனை பேச வைக்கலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டது.
பள்ளியிலும், வீட்டிலும் மகனோடு கூடவே இருந்து பயிற்சி தர நினைத்த அம்மா, மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்தார். ஆம்...ஏற்கனவே எம்.ஏ., பி.எட்., படித்திருந்த அவர், மகனை கவனிப்பதற்காக வேலைக்கு போகாதிருந்தவர், இப்போது அதே மகனின் நலனுக்காக அவன் படிக்கும் பள்ளியில் பணி பார்க்க முடிவு செய்தார்.
சிறப்பு குழந்தைகளை பயிற்றுவிப்பதற்கான பி.எட்., படிப்பை கேரளாவின் கொட்டாரக்கரைக்கு சென்று படித்து, மகன் படிக்கும் கஸ்துார்பா பள்ளியிலேயே வேலைக்கு சேர்ந்தார்.
எங்கிருந்து வருகிறது ஓசை
'அ'வை அறிய வைக்க தொண்டையில் கை வைத்தும், 'ம்'ஐ உணர வைக்க மூக்கில் கை வைத்தும், 'ப'வை உணர வைக்க கையில் காகிதத்தை வைத்து பறக்க வைத்தும் தமிழின் ஒவ்வொரு எழுத்துக்களின் ஓசையும் இப்படித்தான் இருக்கும் என அவனுக்கு உணர வைத்தார். எங்கிருந்து ஓசை உருவாகிறது என புரிய வைக்க அவர் படித்த சிறப்பு படிப்பு பயன் தந்தது.
பள்ளியில் காலை முதல் மாலை வரை எழுத்தையும் ஓசையையும் ஆசையாய் கற்க வைத்த அம்மா, வீட்டிற்கு வந்த பிறகு வாழ்க்கை அனுபவங்களை அள்ளித்தந்து பழக வைத்தார்.
தினமும் அன்றாட பணிகளை உதட்டை அசைத்து அவனுக்கு புரிய வைத்தார். சமைக்கும் போது அவனை கூடவே இருக்க வைத்து 'இது அ..டு..ப்..பு, இது அ..ரி..சி, இது ச..ட்..டி..' என மெதுவாக உச்சரித்து அவனையும் சொல்ல வைத்தார்.
பஸ்சில் போகும் போது இது ப..ஸ்.., க..ண்..ட..க்..டர்.., டி..க்..கெ..ட்' என சொல்லிக்கொடுத்தார் பொறுமையாக! ஒரு மரண வீட்டில் பிணத்தை கூட காட்டி சொல்ல வைத்தாராம் அந்த அம்மா.. வியப்பாக இருக்கிறது அல்லவா?
மாற்றுத்திறனாளி மகனா
மாற்றுத்திறனாளி மகன் பிறந்தான் என்று காலமெல்லாம் மனக்கவலையாய் இருந்திருந்திராமல், மகனின் திறமை மீது அபார நம்பிக்கை கொண்டு, அவனை மாற்றிக்காட்டலாம் என பொழுதெல்லாம் போராடினார் அந்த தாய்.
நாள் முழுவதும் சொற்பயிற்சி பெற்ற அவன் மெல்ல மெல்ல 'அம்மா.. அப்பா...' என பேசத்துவங்கி சத்தமாக, சுத்தமாக வாசிக்க துவங்கி இலக்கிய நுால்களை கூட வேகமாக படிக்க துவங்கினான். 8ம் வகுப்பில் ஓரளவிற்கு பேச வந்ததும், பூர்வீக சொத்தை விற்று ரூ.பல லட்சம் செலவில், கேட்கும் திறன் பெறுவதற்கான 'காக்ளியர் இம்பிளான்ட்' சர்ஜரி செய்தனர். இப்போது ஓரளவிற்கு காது கேட்க துவங்கியது. எனவே பொது பள்ளியில் சேர்த்தனர். அங்கு 9ம் வகுப்பிற்கு போன போது புது சவாலை ரஞ்சித் எதிர்கொள்ள வேண்டி வந்தது.
சிறப்பு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் படிப்பதில் இருந்து விலக்கு இருந்ததால், எட்டாம் வகுப்பு வரை ஆங்கிலமே படிக்கவில்லை. இப்போது ஆங்கிலம் படித்தாக வேண்டிய கட்டாயம். இதனையும் சவாலாக ஏற்று ஆங்கிலத்தில் கவனம் செலுத்தினான், வீட்டில் அம்மாவின் டியூஷனோடு!
என்னதான் பேச்சு வந்தாலும், கேட்கும் திறன் பெற்றாலும் மற்ற மாணவர்கள் போல சரளமாக செயல்படாததால் புதிய பள்ளியில் மாணவர்கள் கேலி செய்தனர். வீட்டிற்கு வந்து அழுத ரஞ்சித்தை கட்டியணைத்து ஆறுதல் கூறியது...அம்மா அல்லாது வேறு யாராக இருக்க முடியும்?
படி..படி..படித்துக்கொண்டே இரு 'இந்த சிறு குறை உன் தவறு அல்ல; மற்றவர்கள் கேலி செய்வதை பார்த்து நாம் அழுதால், இந்த வாழ்க்கை முழுவதும் அழுது தான் ஆக வேண்டும். நீ படி..படி..படித்துக்கொண்டே இரு! அறிவை வளர்த்துக்கொள். உன்னை முன்மாதிரியாக ஒரு நாள் இந்த மாணவர் உலகம் கொண்டாடும்!'- அம்மா சொன்ன வார்த்தைகள் இது.
அம்மா அளித்த ஊக்கத்தில் பிளஸ் 2 வில் பள்ளியில் முதல் மாணவராகவும், மாற்றுத்திறனாளி மாணவர் பிரிவில் மாநில முதல் மாணவராகவும் தேர்வானார். பிறகு பி.இ., பட்டம் பெற்றார். முதல் முயற்சியில், ஒரே ஆண்டில் சிவில் சர்விஸ் தேர்வில் வென்றார். அகில இந்திய அளவில் 731ம் இடம் பெற்று, 2021ல் கேரளா 'கேடரில்' ஐ.ஏ.எஸ்., ஆனார்.
மக்கள் கொண்டாடும் அதிகாரி
கோட்டயம் சப்-கலெக்டராக பணிபுரிந்த போது, அனாதை ஆசிரமங்களில் வளரும் குழந்தைகளுக்கு, முதன்முதலாக பிறப்புசான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
சொத்தை எழுதி வாங்கி விட்டு பெற்றோரை புறந்தள்ளும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுத்து, சொத்துக்களை பெற்றோரிடமே திரும்ப ஒப்படைத்தார். நேர்மையான பல நடவடிக்கைகளால் மலையாள மக்கள் மனம் கொண்டாடும் ஐ.ஏ.எஸ்., ஆக சாதித்துக்கொண்டிருக்கிறார் ரஞ்சித்.
ஆளுமை மிக்க அற்புதமான அதிகாரியை உருவாக்கிய தாய் அமிர்தவல்லி, மகன் படித்த பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிந்து தலைமையாசிரியராய் ஓய்வு பெற்று விட்டார்.
@block_B@
அம்மா தன் வாழ்வையே அர்ப்பணித்தது குறித்து ரஞ்சித் கூறியதாவது: நான் கேட்கும் திறன் இல்லாமல், பேச இயலாமல் பிறந்தேன் என்பதற்காக அம்மா சோகத்தோடு முடங்கி, வெறுப்பாகி என்னை புறந்தள்ளவில்லை. மாறாக என் மாற்றுத்திறனை, திறனாக மாற்ற அவரது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். என் படிப்பிற்காக கோவையில் தனி ஆளாய் குடியேறினார். என்னை பேச வைப்பதில் முழுக்கவனம் செலுத்தினார். திக்கி திணறி நான் பேச ஆரம்பித்த போது, நிறைய இலக்கண பிழைகளோடு பேசினேன். உச்சரிப்பும் சரியாக வரவில்லை. அந்தந்த சிறு குறைகளை அம்மா திருத்திக்கொண்டே வந்தார். உதாரணத்திற்கு 'அவள் வந்தார்; அவர் வந்தாள்' என்று சொல்வேன். சும்மாவே பேசத்திணறும் எனக்கு 'அன்னம், அண்ணம், கரை, கறை' என தெளிவான உச்சரிப்பைக்கூட சொல்லித் தந்தார். அப்பாவும், அண்ணனும் எனக்கு நம்பிக்கை தந்து பக்கபலமாக இருந்தனர். நான் துாங்கும் நேரம் தவிர தொடர்ச்சியாக அம்மா பேச்சுப்பயிற்சி தரும் போது, தமிழ் பயிற்சியும் சேர்த்தே தந்தார். அதனால் நான் தமிழ் வழியில் பிற பாடங்களை எழுதி, தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக எடுத்து, ஐ.ஏ.எஸ்., ஆக முடிந்தது. என்னை பேச வைத்த 'தெய்வம்' அம்மா என்றால், இந்த ஐ.ஏ.எஸ்.,ம் அம்மாவால் கிடைத்ததே என்றார் நெகிழ்ச்சியாக!block_B
great inspiration from this story...great..
Hats of this mother and son. Great effort, great guide, only a mother can do such tireless efforts. God bless the entire family. After becoming IAS, his social work is also very commendable. His mother and him are the chosen one by the God.மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?