வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் திட்டவட்டம்

20


புதுச்சேரி: வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நாம் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி செல்லுவதற்கு உதவியாக அமையும். நமது கனவு, இளைஞர்களின் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. புதுச்சேரியில் மின்னணு வாகனங்கள் தொழில் தொடங்கவும் வாய்ப்பு உள்ளது.



செமி கண்டக்டர் திட்டம் புதுச்சேரிக்கு பெரும் வளர்ச்சியாக அமைந்துள்ளது. மக்களுக்கு தேவையான திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அரசு செய்து கொடுக்கும். பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர இருக்கிறார். சமீபத்தில் மிகப்பெரிய தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தை நடத்திவிட்டு சென்று இருக்கிறார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் வகையில் தேஜ கூட்டணி கூட்டம் இருந்தது.


தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் வருகிறது என்று பார்ப்போம். எல்லா கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாம் தேர்தலுக்காக பட்ஜெட் தயாரிப்பவர்கள் அல்ல. நாம் எப்பொழுதும் நாட்டின் வளர்ச்சி, நாட்டின் தொலைநோக்குப் பார்வை, வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி தான் நாம் இந்த பட்ஜெட்டை தயாரித்து இருக்கிறோம்.


வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவது உறுதி செய்யப்பட்டது. திமுக வீட்டிற்கு செல்லும் நாளும் நிர்ணயிக்கப்பட்டது. எங்கள் கூட்டணி மிகப்பெரிய வலுவான கூட்டணி. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Advertisement