சூடானில் துணை ராணுவம் டிரோன் தாக்குதல்; 10 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

கார்ட்டூம்: சூடானில் துணை ராணுவத்தினர் நடத்திய டிரோன் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 24 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவம் ஆட்சி நடந்து வருகிறது. இதன் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல் பர்ஹன் செயல்பட்டு வருகிறார். இவர் துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு அதிவிரைவு ஆதரவு படையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால், சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில், அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வடக்கு கொர்டோபென் மாகாணத்தில் ரஹாட் பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது துணை ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 2 பச்சிளம் குழந்தைகள், 8 சிறுவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, சூடானில் நிலவி வரும் உள்நாட்டு போரினால் இதுவரையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. மேலும், 1.40 கோடி மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறுகின்றனர். இந்தப் போர் நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்ததோடு, சூடானின் சில பகுதிகள் பஞ்சத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பேரை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும் என்று மருத்துவர்கள் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement