தே.ஜ., கூட்டணியில் 'மியூசிக்கல் சேர்'; விருதுநகர் மாநாட்டில் ஸ்டாலின் கிண்டல்

விருதுநகர்: ''தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை, 2024 லோக்சபா தேர்தலை போல, வரும் சட்டசபை தேர்தலிலும் ஜீரோவாக்க வேண்டும்,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சியில் நடந்த தி.மு.க., இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது:


மாநிலங்களை நகராட்சிகள் போல மாற்றத் துடிக்கிறது மத்திய அரசு. மாநில கட்சிகளே இருக்கக்கூடாது எனவும் நினைக்கின்றனர். அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழகம் தான். அடிமைகளும், துரோகிகளும் இணைந்து, தமிழகத்தின் சுய மரியாதையை அடகு வைத்துள்ளனர்.


தமிழகம் எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னாக இருந்தாலும், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காகவாவது பட்ஜெட்டில் தமிழகத்தின் மீது அக்கறை காட்டுவர் என நினைத்தோம்; கடைசியில் அதுவும் இல்லை.



நியாயமாக சேர வேண்டிய கல்வி நிதியை கேட்கிறோம்; வரி வருவாயை 50 சதவீதமாக கொடுக்க கேட்கிறோம்; கீழடி அறிக்கை, எய்ம்ஸ் மருத்துவமனையை கேட்கி றோம். ஆனால், எதையும் கொடுப்பதில்லை.


அதனால், தமிழகத்தில் என்.டி.ஏ., கூட்டணி, 2024 லோக்சபா தேர்தலை போல, வரும் சட்டசபை தேர்தலிலும் ஜீரோவாக்கப்பட வேண்டும். மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல், பா.ஜ.,வின் கிளை செயலராகவே மாறி விட்டார் அ.தி.மு.க., வின் பழனிசாமி.

சொல்லப்போனால், என்.டி.ஏ., பழனிசாமியாக மாறிவிட்டார். நானும் ரவுடிதான் என்பது போல, மைக் முன் வந்து, 'நான் தான் கூட்டணிக்கு தலைமை; நான் தான் தலைமை' என புலம்புகிறார்.


பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள 125 நாள் வேலை திட்டத்தை நாம் தடுக்கிறோம் என்கிறார் பழனிசாமி. அந்த புதிய சட்டத்தை அவர் முழுமையாக படித்தாரா?


மாநில அரசு தான் 40 சதவீத நிதி தர வேண்டும் என்று உள்ளது. இவர் தான் ஆட்சிக்கு வந்தால், 150 நாள் வேலை தருவதாக கூறுகிறார்.


இவர்கள் மக்கள் நலனுக்காக கூட்டணியில் இணையவில்லை. இவர்களுக்குள் ஒரு 'மியூசிக்கல் சேர்' போட்டி நடந்து வருகிறது. தமிழகமா, என்.டி.ஏ.,வா என்ற ஜனநாயக போரில் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.




@block_B@

கிள்ளிக்கூட தர மனமில்லை

யார் ஆட்சியில் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என மக்களுக்கு தெரியும். பட்ஜெட்டில் அள்ளிக்கூட இல்லை; கிள்ளிக்கூட தரமாட்டேன் என்று நினைப்பவர்கள் உடன், நம்மை எதிர்ப்பவர்களெல்லாம் கைகோர்த்துள்ளனர். ரயில்வே திட்டங்களில் மஹாராஷ்டிரா, உ.பி., குஜராத் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குகின்றனர். தமிழகத்திற்கு 7,000 கோடி ரூபாய் தான் ஒதுக்குகின்றனர். நம் மாணவர்களின் கல்வி நிதிக்காக பலமுறை போராடினோம். ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொண்டால் தான், நிதி கொடுப்போம் என்கின்றனர். 3,500 கோடி ரூபாய்க்கு மேல் நிறுத்தி வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்களோடு தான், அ.தி.மு.க., கைகோர்த்துள்ளது.

- கனிமொழி துணை பொதுச்செயலர், தி.மு.க., block_B




@block_P@

மிரட்டலுக்கு தி.மு.க., அஞ்சாது

சமீபத்தில் தமிழகம் வந்தபோது, 'டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும்' என்றார் பிரதமர் மோடி. ஆனால், நாங்கள் திராவிட மாடல் எனும் சிங்கிள் இன்ஜின் வைத்து, 11.9 சதவீத இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து விட்டோம். அந்த டபுள் எனும் டப்பா இன்ஜினை வைத்து உ.பி., பீஹார் மாநிலங்கள், தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சியில் பாதிகூட தொடவில்லை. ஈ.டி., மருத்துவக் கல்லுாரி வழக்கு, சம்மந்தி டெண்டர் எடுத்த வழக்கை முடித்து தருகிறேன் என அடிமைக்கூட்டத்தை, பா.ஜ., தன் பக்கம் வளைத்துள்ளது. மிரட்டலுக்கு அடிமை அ.தி.மு.க., பயப்படும். தி.மு.க., தொண்டன் பயப்பட மாட்டான். பா.ஜ.,வின் கிளையாக அ.தி.மு.க., இருந்தது. இன்று பா.ஜ.,வின் இலையாக மாறிவிட்டது. பத்து தோல்விகண்ட பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள். சட்டசபை தேர்தலில், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் வைத்துள்ளேன். அதை செய்வார் என நம்புகிறேன். அரசியல் அறிவே இல்லாதோர் உளறினாலும், புலம்பினாலும், களத்தி ல் நின்று ஜெயிக்கக்கூடிய கட்சி தி.மு.க., தான்.

- உதயநிதி துணை முதல்வர், தி.மு.க., block_P

Advertisement