ரஷ்யாவில் இந்தியர் உள்பட 8 பேருக்கு கத்திக்குத்து; கொடூரமாக தாக்கிய 15 வயது வாலிபர் கைது


மாஸ்கோ: ரஷ்யாவில் இந்தியர் உள்பட 8 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ரஷ்யாவின் பாஷ்கார்டொஸ்தான் குடியரசின் அபா பகுதியில் அரசு மருத்துவ பல்கலை. வளாகம் உள்ளது. இங்கு நுழைந்த 15 வயதே நிரம்பிய வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அங்கே இருந்தவர்களை சரமாரியாக குத்தினார். இந்த சம்பவத்தில் இந்தியர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக அங்கு விரைந்தனர். கத்தியால் குத்திய நபரை அவர்கள் பிடிக்க முயன்றபோது, அதே கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார். அவரை மடக்கி பிடித்த போலீசார், பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தாக்குதல் நடத்தியவர் யார், எதற்காக அவர் இப்படி நடந்து கொண்டார் என்பது பற்றிய எந்த விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement