குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
சென்னை: கோடை வெயில் துவங்குவதற்கு முன்பே, பல அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால், நீர் மேலாண்மையை கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
நீர்வளத்துறை வாயிலாக, 90 அணைகள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., தற்போது, 90 அணைகளில் சேர்த்து, 135 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. சதவீத அடிப்படையில் 60.2 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
அதிலும், நான்கு அணைகளில் மட்டுமே, தற்போது முழு கொள்ளளவுக்கு நீர் இருப்பு உள்ளது. மீதமுள்ள 20 அணைகளில் 76 முதல் 99 சதவீதமும், 18 அணைகளில் 51 முதல் 75 சதவீதமும், 18 அணைகளில், 26 முதல் 50 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.
மேலும், 28 அணைகளில், 25 சதவீதத்திற்கும் கீழ் நீர் இருப்பு உள்ளது. வரும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கினால் மட்டுமே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும்.
அதுவரை பாசனம், குடிநீர், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு நீர் திறக்க வேண்டும் என்பதால், நீர் இருப்பு கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
எனவே, சட்டசபை தேர்தல் நேரம் என்பதால், நீர் மேலாண்மையை கடைப்பிடித்து, தேவையான அளவு நீரை திறந்து, தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.