மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: ம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான, இளநிலை, 'நீட்' நுழைவுத்தேர்வு, வரும் மே 3ம் தேதி நடக்கிறது. இதற்காக, மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுதும் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் கால்நடை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவு தேர்வின் அடிப்படையில் நடக்கிறது. இந்த தேர்வை, மத்திய கல்வித் துறையின் கீழ் இயங்கும், தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.
அந்த வகையில், 2026ம் ஆண்டுக்கான இளநிலை 'நீட்' நுழைவுத் தேர்வு, வரும் மே மாதம் 3ம் தேதி, மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.
பிளஸ் 2 தேர்வில், அறிவியல் பாடத்தை தேர்வு செய்த மாணவ - மாணவியர், https://nta.ac.inl, https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில், மார்ச் 8ம் தேதி, நள்ளிரவு 11:50 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். அதில் திருத்தம் மேற்கொள்ள, மார்ச் 10 முதல் 12ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு 1,700 ரூபாய்; பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 1,600 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு, 1,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, வெளிநாட்டினருக்கு 9,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்ப பதிவு தொடர்பாக, மாணவர்களுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், 011 - -40759000 மற்றும் 011 - 69227700 ஆகிய தொலைபேசி எண்களிலும், neetus2026@nta.ac.in என்ற இ - மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.