சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?
சென்னை: சனிக்கிழமைகளில் செயல்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், 1,000 ரூபாய் சிறப்பு கட்டணம் வசூலிப்பதில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில், 590 சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் நடக்கின்றன. இதில், திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் மட்டும் தான், பத்திரப்பதிவு நடந்து வந்தது.
ஆனால், விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும் என, பொது மக்களிடம் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அதிக ஆவணங்கள் தாக்கலாகும் 100 அலுவலகங்கள், சனிக்கிழமைகளிலும் செயல்படும் என, 2021ல் பதிவுத்துறை அறிவித்தது.
இந்த வசதிக்கு, பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை அடுத்த கட்டமாக, பிற அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை அரசு பரிசீலித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய கோரிக்கை எழுந்துள்ளது. சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களில், சொத்து பத்திரம் மட்டுமல்லாது, பிற பத்திரங்களையும் பதிய, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: சனிக்கிழமைகளில் செயல்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், அனைத்து வகை பத்திரங்களுக்கும் தலா, 1,000 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சொத்து பத்திரங்களை பதிவு செய்ய வருவோருக்கு, இது பெரிய சுமையாக தெரியாது.
ஆனால், வங்கியில் ஆவண வைப்பு அடமானம் முடிப்பு தொடர்பான பத்திரங்கள், திருமண பதிவுகள் போன்ற பணிகளும் சனிக்கிழமைகளில் நடக்கின்றன. இதற்கான அடிப்படை கட்டணங்கள், 50 அல்லது, 100 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளன.
சனிக்கிழமைகளில் இந்த பணிகளுக்கும், 1,000 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஊரக பகுதி மக்களின் நிலையை கருத்தில் வைத்து, இந்த கட்டணத்தை நீக்க வேண்டும் என, மேலதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.