கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 

திருப்பூர்: கூட்டுறவு விற்பனை சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 10 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் வங்கி பணி, விற்பனை பணி, பொது வினியோக திட்டம் உள்ளிட்ட பல தரப்பில் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களுக்கான ஊதிய உயர்வு உத்தரவை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் பிறப்பித்துள்ளார். அதில், சங்கங்களை அதன் வர்த்தக அளவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தரம் பிரித்தும், அதற்கேற்ப ஊழியர் நியமனம் மற்றும் ஊதிய நிர்ணயம் செய்தும் உத்தரவிடப் பட்டுள்ளது.

இதில், சங்கங்களில் பணியாற்றும் உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் விற்பனை உதவியாளர் பணியிடங்கள் அனைத்தும் உதவியாளர் என, ஒரே பதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமையிடங்களில் பணிநிலைத்திறன் பணியாளர் எண்ணிக்கை மற்றும் தகுதியும் குறிப்பிட்டு, சங்கத்தின் தரத்துக்கு ஏற்ப நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்களுக்கு, 10 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 3 சதவீதம் ஊதிய உயர்வு அனுமதிக்கப்படுகிறது.

அகவிலைப்படி 55 சதவீதம்; வீட்டு வாடகைப்படி; மருத்துவப்படி 300 ரூபாய்; சாவிப்படி 500 ரூபாய்; இடர்ப்படி 300 ரூபாய்; சலவைப்படி 200; வெளியூர் பணிகளின் போது, பதவிக்கேற்ற தினப்படி; மாற்றுத்திறனாளிகள் சிறப்பு படி; மலைப் பிரதேசங்கள்; நகரப்பகுதிக்கான ஈட்டுப்படி ஆகியனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

* 'ஏ' வகை சங்கத்தில் 3,200 முதல் 19,000 ரூபாய் வரையும்; 'பி' வகை சங்கத்தில் 2,900 முதல் 12,100 ரூபாய் வரையும், 'சி' வகை சங்கத்தில் 2,500 முதல் 7 ஆயிரம் ரூபாய் வரையும், 'டி' வகை சங்கத்தில் 2,400 முதல் 9,800 ரூபாய் வரையும் ஊதியம் அதிகரிக்கும்.

கூட்டுறவு துறை ஊழியர்கள் கூறுகையில், 'புதிய ஊதிய நிர்ணயத்தில் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு காரணிகள் அடிப்படையில், பெறப்படும் ஊதியத்தில் 19 சதவீதம் வரை அதிகம் கிடைக்கும்' என்றனர்.

Advertisement