இந்திய அணிக்கு ரூ. 7.5 கோடி பரிசு: பி.சி.சி.ஐ., அறிவிப்பு

புதுடில்லி: உலக கோப்பை வென்ற இளம் இந்திய அணிக்கு ரூ. 7.5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே, நமீபியாவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் நடந்தது. ஹராரேயில் நடந்த பைனலில் இந்திய அணி, 100 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆறாவது முறையாக (2000, 2008, 2012, 2018, 2022, 2026) சாம்பியன் ஆனது.


பீஹாரை சேர்ந்த 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பைனலில் 80 பந்தில் 175 ரன் குவித்து, கோப்பை வெல்ல உதவினார். இத்தொடரில் அதிக ரன் இந்திய வீரர் ஆனார் வைபவ் (439). லீக் சுற்றில் மோசமாக செயல்பட்ட கேப்டன் ஆயுஷ் மாத்ரே (214 ரன், 7 விக்., மும்பை) அரையிறுதி (62), பைனலில் (53) எழுச்சி பெற்று அசத்தினார்.


விகான் (240, 5 விக்.,), அபிக்யான் (239), அரையிறுதியில் சதம் விளாசிய ஆரோன் ஜார்ஜ் (170), தமிழகத்தின் 'ஆல் ரவுண்டர்' அம்ப்ரிஸ் (73 ரன், 11 விக்.,), தமிழக முன்னாள் வீரர் வாசுதேவன் தேவேந்திரன் மகன் தீபேஷ் (6 விக்.,), ஹெனில் (11) என பலரும் தங்கள் பங்கிற்கு வெற்றிக்கு கைகொடுத்தனர்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் தேவஜித் சைகியா கூறுகையில்,'' நமது இளம் சாம்பியன்களை நினைத்து, ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்படுகிறது. 'டி-20' உலக கோப்பை துவங்கும் நேரத்தில், தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு ரூ. 7.5 கோடி பரிசு வழங்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement