ராகுல் அரைசதம்: மீண்டது கர்நாடகா

மும்பை: மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியின் ராகுல் அரைசதம் விளாச, கர்நாடகா அணி மீண்டது.
மும்பையில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசனுக்கான காலிறுதியில் மும்பை, கர்நாடகா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் மும்பை 120, கர்நாடகா 173 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் மும்பை அணி 2வது இன்னிங்சில் 189/2 ரன் எடுத்திருந்தது.


மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆகாஷ் ஆனந்த் (70), முஷீர் கான் (49) நம்பிக்கை தந்தனர். தனுஷ் (48*), துஷார் தேஷ்பாண்டே (47) கைகொடுத்தனர். மும்பை அணி 2வது இன்னிங்சில் 377 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

பின், 325 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கர்நாடகா அணிக்கு மயங்க் அகர்வால் (3) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய கே.எல். ராகுல் அரைசதம் கடந்தார். கேப்டன் தேவ்தத் படிக்கல் (39) ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி 2வது இன்னிங்சில் 113/2 ரன் எடுத்து, 212 ரன் பின்தங்கி உள்ளது. ராகுல் (60), கருண் நாயர் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

உத்தரகாண்ட் வெற்றி

ஜாம்ஷெட்பூரில் நடந்த காலிறுதியின் முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் 235, உத்தரகாண்ட் 371 ரன் எடுத்தன. ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு சுருண்டது. உத்தரகாண்ட் அணி இன்னிங்ஸ், 6 ரன்னில் வெற்றி பெற்று, முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement