ஆக்கிரமிப்பால் சுருங்கிய ரோடு, மின்கம்பத்தால் இடையூறு தேனி பென்னிகுவிக் நகரில் பொதுமக்கள் தவிப்பு

தேனி: தேனி பென்னிகுவிக் நகரில் ஆக்கிரமிப்பால் ரோடு சுருங்கியும், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக அப்பகுதி குடியிருப்போர் புலம்புகின்றனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 31வது வார்டு பென்னிகுவிக் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதி நகரின் விரிவாக்க பகுதியாகும். இப்பகுதியில் அரசு அலுவலர்கள், ஓய்வு பெற்றோர், வணிகர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஆனால், அரசு துறைகள் அலட்சியத்தால் இங்கு வசிப்பவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இங்குள்ள காலி வீட்டு மனைகளை அடிக்கடி சுத்தம் செய்யாததால் முட்கள் வளர்ந்து புதர்மண்டி விஷஜந்துக்கள் வசிப்பிடமாக மாறிவிட்டது. இந்த முட்புதர்களில் இருந்து அடிக்கடி வீடுகளுக்குள் பாம்பு, தேள், பூராண் உள்ளிட்ட விஷ பூச்சிகள் புகுவதால் குழந்தைகள், முதியவர்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர். காலி மனைகளை சுத்தம் செய்து வைக்க நகராட்சி நிர்வாகம் இடத்தின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதாள சாக்கடை இணைப்பு வழங்கவில்லை முருகன், ஓய்வு போலீஸ் எஸ்.ஐ.,: பென்னிகுவிக் தெரு பத்திரபதிவில் 23 அடி அகல ரோடு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 10 அகலம் கூட இல்லை. பலஇடங்களில் இருபுறமும் தனியார் ஆக்கிரமிப்பால் ரோடு சுருங்கிவிட்டது. நுழைவு பகுதியில் ஒருபுறம் டிரான்ஸ்பார்மர், மற்றொரு புறம் உயர் மின்னழுத்தம் உள்ள மின்கம்பம் வைத்து மின்வாரியத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அவசர காலங்களில் வாகனங்கள் வந்து செல்ல முடியாத அவல நிலை உள்ளது. ரோடுகளை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மின்கம்பங்களை மாற்றி அமைக்க கலெக்டர் அலுவலகம், துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. நகராட்சி சார்பில் குறுக்குத்தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க 8 மாதங்களுக்கு முன் குழாய் பதித்தனர். ஆனால், வீடுகளுக்கு இணைப்பு வழங்கவில்லை. இதனால் தெருக்கள் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தால் சகதி காடாக காட்சியளிக்கிறது. பலர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.

தெருநாய்கள், திருட்டு பயம் குமரேசன், முன்னாள் ராணுவ வீரர் : இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இரவில் நடந்து செல்பவர்கள், டூவீலர்களில் செல்பவர்களை துரத்துகிறது. இதில் பலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் இரவில் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். சிலர் வீடுகளை நோட்டமிடுவது, பொருட்களை திருடி செல்வது தொடர்கிறது. இதனை தடுக்க போலீசார் தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். சில பகுதிகளில் சாக்கடை கட்டமைப்பு இல்லை. இதனால் வீடுகள் முன் குழிதோண்டி சாக்கடை கழிவு நீரை விடுகின்றனர். அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பலர் காய்ச்சல் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படுகின்றனர். சாக்கடை அமைக்க, தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement