அமைச்சர்கள் தொகுதிகளில் ஜாதி பாகுபாடு அதிகம்: சொல்கிறார் கிருஷ்ணசாமி

தேவகோட்டை: ''அமைச்சர் தொகுதிகளில் தான் ஜாதி பாகுபாடு அதிகம் இருப்பதை உறுதியாக சொல்ல முடியும்'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தேவகோட்டையில் அவர் கூறியதாவது:

எங்கள் கட்சி, தோழமைக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது பற்றி பேசி வருகிறோம். அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம். 50 ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சி நடப்பது மாற்ற முடியாத விதியாக உள்ளது.

2026ல் புதிய தமிழகம் அந்த விதியை மாற்ற வேண்டும் என சொல்கிறோம். ஒரு கட்சி ஆட்சி என்பது ஜனநாயக விரோதம். எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். எங்களது கட்சி நிலைப்பாட்டை கூறி விட்டோம். கூட்டணி அரசு அமைக்கும் அரசியல் கட்சியுடன் தான் எங்கள் கூட்டணி. பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி வந்துவிட்டன. இங்கு மட்டும் தொடர்ந்து ஒரு குடும்பத்தினர், ஒரு கட்சியினர் தான் அமைச்சர்கள் ஆக வேண்டுமா; இதனை ஏற்க முடியாது. கூட்டணி அரசு அமைந்தால் தான் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

எந்தக்கட்சி தலைவர்களும் கூட்டணியை பற்றி வாய் திறக்கவில்லை. எங்களது கட்சியினர் ஓட்டு வேண்டும். எங்களுக்கு பிரதிநிதி வேண்டாமா. நாங்கள் ஒரு குடும்பம். ஒரு கட்சி தான் ஆட்சி என்றால் தைரியம் இருந்தால் தனித்து போட்டியிடுங்கள். சமூக நீதி பேசும் தி.மு.க., உள்ஒதுக்கீடு என்ற பெயரில் பட்டியலின இடஒதுக் கீட்டை குறைக்கிறது. அரசில் அங்கம் வகித்தால் இதுபோன்று ஏற்படாது.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் வளர்ந்து விட்டது. பணத்தை வாங்காமல் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.

அமைச்சர்கள் தொகுதிகளில் தான் ஜாதி பாகுபாடு அதிகமாக இருக்கிறது. தாங்கள் சேர்ந்த ஜாதிக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறார்கள். மற்ற சமுதாயத்தினரை ஒதுக்குகிறார்கள். இதை ஆதாரத்துடன் உறுதியாக கூற முடியும்.

மத்திய அரசு நிதி தரவில்லை எனக் கூறும் தி.மு.க. , எஸ்.சி., பிரிவினருக்கு சிறப்பு உட்கூறு திட்டத்தில் 18 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும். இதுவரை ஒதுக்கியது இல்லை என்றார்.

Advertisement