உள்ளாட்சியில் 20 சதவீதம் தருவதாக ஏமாற்றிவிட்டனர்: தி.மு.க., மீது பழிசுமத்தி காங். மாவட்ட தலைவர் பேச்சு

துாத்துக்குடி; ''உள்ளாட்சி பதவிகளில், 20 சதவீதம் தருவதாக ஏமாற்றி விட்டனர்,'' என, தி.மு.க.,வை நேரடியாக காங்., மாவட்ட தலைவர் பெருமாள்சாமி குற்றஞ்சாட்டினார்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடந்த காங்., நிர்வாகிகள் கூட்டத்தில், வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி பேசியதாவது:

வரும், 2029 தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் நிச்சயமாக பிரதமராக வருவார். யாரும் நம்மை ஏமாற்ற முடியாது; முதுகில் குத்த முடியாது. குத்தினால், திரும்ப முதுகில் குத்தி விடுவோம். வருங்காலங்களில் காங்., கட்சியினரை யாரும் ஏமாற்ற முடியாது.

இவ்வளவு நாள் ஏமாந்து விட்டோம். இனி ஏமாற மாட்டோம். கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில், 20 சதவீத பதவிகள் தருவதாக தெரிவித்து ஏமாற்றி விட்டனர். அவர்கள் தந்திருந்தால் இன்று காங்., நிர்வாகிகள் பலர் உள்ளாட்சி பதவிகளில் இருந்திருப்பர்.

காங்., இல்லையென்றால் நாடு துண்டாடப்படும். காங்., கட்சியை நம்பி ஒவ்வொரு கூட்டணிக் கட்சியினரும், 'எங்களிடம் வாருங்கள்' என ஏங்குகின்றனர். இளம் தலைவராக விஜய் வந்துள்ளார். உண்மையில் அவருக்கு நன்றாக ஆதரவு இருக்கிறது.

தமிழகத்தில் காங்., கட்சிக்கு 12 முதல் 15 சதவீதம் ஓட்டுக்கள் உள்ளன. ஆனால், 8 சதவீதம் இருப்பதாகவே கூறுவர். கூட்டணி கணக்குகள் எல்லாம் மாறி போய்க் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement