காஷ்மீர் அரசை விமர்சித்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கு ஆளும் கட்சியும் பாராட்டு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில், ஆளும் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள குறைகளை விமர்சித்து, தன் கன்னிப்பேச்சை மேற்கொண்ட பா.ஜ.,வைச் சேர்ந்த இளம் எம்.எல்.ஏ.,வான தேவ்யானி ராணாவுக்கு, கட்சிப் பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சட்டசபையில் சமீபத்தில், 2026 - 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம், சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நாக்ரோட்டா தொகுதி எம்.எல்.ஏ.,வான பா.ஜ.,வைச் சேர்ந்த தேவ்யானி ராணா, 30, பேசினார்.
ஜம்மு - காஷ்மீரின் இளம் எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான இவர், 12 நிமிட தன் கன்னிப்பேச்சின் மூலம், சபாநாயகர் உட்பட அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது: நாங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இங்கு அனுப்பப்பட்டுள்ளோம். மக்களின் துன்பங்களை புறக்கணிக்காமல், அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மைக்கு கடந்த நிதியாண்டில் 719 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் 350.76 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், காலநிலை மாற்றம் காரணமாக மேகவெடிப்பு, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இதேபோல், கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறைவாக உள்ளது. சுகாதாரப் பணியாளர்களின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மின் துறையில் உள்ள அடிப்படை பிரச்னைகளை சீரமைக்கவும் போதிய நிதி ஒதுக்கவில்லை.மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயணம் அறிவித்தாலும், அதற்கேற்ப போதிய பஸ் வசதிகள் இல்லை. இவற்றை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இவரது பேச்சைக் கேட்ட அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்துல் ரஹீம் ரதர், புதிய எம்.எல்.ஏ.,வுக்கு அனைவரும் ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் பா.ஜ., - எம்.எல்.ஏ., தேவ்யானி ராணாவின் கன்னிப்பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவருக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தொழிலதிபரான இவர், தன் தந்தையும் பா.ஜ.,வின் மூத்த தலைவரான தேவேந்திர சிங் ராணாவின் மறைவைத் தொடர்ந்து, அவர் வென்ற நாக்ரோட்டா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்றார்.
இவரது தந்தை, ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டு கட்சியில் மூத்த தலைவராக இருந்தவர். முதல்வர் உமர் அப்துல்லாவின் நெருங்கிய நண்பர்.
சில ஆண்டுகளுக்கு முன் தேசிய மாநாட்டு கட்சியில் இருந்து விலகி பாஜ கட்சியில் இணைந்து விட்டார்.
அவ்வாறு அவர் விலகிய போது, அதை தனது மிகப்பெரிய அரசியல் தோல்வி என்று உமர் அப்துல்லா குறிப்பிட்டார். இந்த நட்பு காரணமாகவே, சட்டசபையில் தேவ்யானி பேசியபோது அவருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆளும் கட்சியினர் கைதட்டி வரவேற்றனர்.
மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?