காவனுார் சாலை வளைவில் தடுப்பு சேதம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்: ஒரத்துாரில் இருந்து காவனுார் செல்லும் சாலையில் உள்ள வளைவில், இரும்பு தடுப்புகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

ஒரத்துார் - காவனுார் பிரதான சாலை வழியே, மாடம்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், கவனுார் அருகே, சாலை வளைந்து செல்கிறது. இந்த வளைவில் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.

தற்போது தடுப்பு முழுதும் சேதமடைந்து உள்ளது. இதனால், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்குகின்றனர்.

குறிப்பாக, மின் விளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்த அப்பகுதியில், இரவு நேரங்களில் வரும் இருச்சக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.

எனவே, காவனுார் சாலையில் உள்ள அபாயகரமான வளைவில், சேதமான தடுப்பினை மீண்டும் அமைக்க, சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வானக ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement