வாலாஜாபாதில் சாலையோரம் இரும்பு தடுப்பு சேதம்
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ரயில்வே பாலத்தின் ஓரத்தில் போடப்பட்டுள்ள இரும்பிலான தடுப்பு சேதமடைந்து உள்ளது.
வாலாஜாபாதில் இருந்து, படப்பை செல்லும் சாலையில், வாலாஜாபாத் ரயில்வே பாலம் உள்ளது. இந்த ரயில்வே பாலம் வழியாக ஒரகடம், படப்பை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்வே பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி கவிழ்ந்து விடாமல் இருக்க, பழைய நுாலக கட்டடத்தில் இருந்து, பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு செல்லும் சாலையோரம், கடந்த ஆண்டு இறுதியில் தடுப்பு அமைத்தனர். இந்த தடுப்பு, வாலாஜாபாத் சித்த மருத்துவமனை அருகே சேதமடைந்துள்ளது. வாகனங்கள் நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது.
எனவே, வாலாஜாபாத் ரயில்வே பாலம் ஓரம் சரியான முறையில், கான்கிரீட் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.