ஒரத்துாரில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி பிடிக்க மரக்கட்டையால் முட்டு
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே, ஒரத்துார் செல்லும் சாலையோரம் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி பிடிக்க வைத்துள்ள மரக்கட்டையால் மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
குன்றத்துார் ஒன்றியம், ஒரத்துாரில் 1,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு, ஒரத்துார் பிரதான சாலையோரம் மின் கம்பங்கள் வழியாக மின்கம்பி செல்கிறது.
படப்பையில் இருந்த ஒரத்துார் செல்லும் சாலை வழியே, வடமேல்பாக்கம், ஏரிவாக்கம், குத்தனுார், காவனுார் உள்ளிட்ட கிராம மக்கள் தினமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சாலையோரம் செல்லும் மின் கம்பிகள், பல்வேறு இடங்களில் மிகவும் தாழ்வாகி உள்ளது. பள்ளி பேருந்து, கனரக வாகனங்கள் உள்ளிட்டவை செல்லும் போது, மின் கம்பியில் உரசி விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்த சாலையோரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் வீட்டுமனை பிரிவிற்கு சென்றுவர, தாழ்வாக உள்ள மின் கம்பிகளை மரக்கட்டை மூலம் உயர்த்தியுள்ளனர்.
சாலையோரம் இது போன்று அலட்சியமாக மின் கம்பியை உயர்த்தி பிடிக்க வைக்கப்பட்டுள்ள மரக்கட்டையால் மின் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, மின் விபத்து ஏற்படும் நிலையில் வைக்கப்பட்டுள்ள மரக்கட்டையை அகற்றி, மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க படப்பை மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.