விடுமுறை நாளிலும் வரி வசூல்; சூலூர் ஊராட்சிகளில் தீவிரம்

சூலூர்: விடுமுறை நாளிலும் ஊராட்சிகளில் வரி வசூல் தீவிரமாக நடக்கிறது.

சூலூர் வட்டாரத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. நடப்பாண்டுக்கான வீட்டு வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. மார்ச் மாதம் நெருங்குவதாலும், சட்டசபை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், வரி வசூலை தீவிரப்படுத்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து, ஊராட்சிகளில் வரியினங்களை பொதுமக்கள் செலுத்த வலியுறுத்தி வாகன பிரசாரம் செய்யப்படுகிறது.

உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களிலும் வரிகளை செலுத்த வலியுறுத்தி தகவல்கள் பகிரப்படுகின்றன. விடுமுறை நாளான நேற்றும் ஊராட்சிகளில் வரிவசூல் மையங்கள் செயல்பட்டன. ஏராளமான பொதுமக்கள் மையங்களுக்கு சென்று தங்களது வரியினங்களை செலுத்தி ரசீது பெற்று சென்றனர்.

சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், வரி வசூல் அனைத்தையும், 100 சதவீதம் முடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதனால், விடுமுறை நாளிலும் வரி வசூல் செய்யப்பட்டது என, ஊராட்சி செயலர்கள் கூறினர்.

Advertisement