தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு

வாஷிங்டன்: ஜப்பானில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. பிரதமர் சனே தகாய்ச்சியை அமெரிக்கா வருமாறு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி, மூன்றே மாதத்தில் ஜப்பான் பார்லியை கலைத்து விட்டு, பிப்ரவரி 8ம் தேதி தேர்தலை அறிவித்தார். அதன்படி, ஜப்பானில் உள்ள 465 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 300 இடங்களுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.


ஆட்சியமைக்க 233 இடங்களே போதும் என்ற நிலையில், அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. இதன்மூலம், பார்லியின் அனைத்து குழுக்களையும் கட்டுப்படுத்தும் முழு அதிகாரத்தையும் சனே தகாய்ச்சியின் எல்டிபி தலைமையிலான கூட்டணி கைப்பற்றுகிறது.


மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்த சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். உங்களின் சிறப்பான தலைமையின் கீழ் இருநாடுகளின் உறவை மேலும் உயரத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று நம்புவதாக குறிப்பிட்டிருந்தார். அதேபோல, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.


அந்த வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து, வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பும் விடுத்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், ஜப்பான் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிரதமர் சனே தகாய்ச்சி மற்றும் அவரது கூட்டணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மிகவும் மதிக்கக்கூடிய, பிரபலமான தலைவர் தகாய்ச்சி. முன்கூட்டியே தேர்தல் நடத்தும் துணிச்சலான முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.


மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளார். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இதுபோன்ற வெற்றி பெறுவது முதல்முறையாகும். உங்களையும், உங்கள் கூட்டணியையும் ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்புக்கு நன்றி தெரிவித்து ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;


வெள்ளை மாளிகைக்குச் செல்வதையும், ஜப்பான்-அமெரிக்கக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். ஆழமான நம்பிக்கை மற்றும் வலுவான ஒத்துழைப்பால் அமெரிக்காவுடனான உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணியின் சக்தி வரம்பற்றது. அமைதியையும், செழிப்பையும் நிலைநிறுத்த இணைந்து செயல்படுவோம், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement