தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு; தாக்குதலை கைவிடுமாறு ராணுவத்திற்கு ஐநா கோரிக்கை

நியூயார்க்: தெற்கு சூடானில் தீவிரமடைந்து வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வட ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த 3 ஆண்டுகளாக, ராணுவத்துக்கும், ஆர்எஸ்எப் எனப்படும் துணை ராணுவப் படைக்கும் அதிகார மோதலால் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆர்எஸ்எப் படைகள் அடுத்தடுத்து முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவதால், உயிருக்கு அஞ்சி, லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வேறு நகரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனால் அங்கு உணவு உற்பத்தி மற்றும் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மேலும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டு வருகிறது. ஆனால், இதைப் பற்றி கவலைப்படாமல் இருதரப்பு தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தெற்கு சூடானில் தாக்குதலை அதிகரித்ததற்கு ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; தெற்கு சூடானில் தீவிரமடைந்து வரும் வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். தற்போது நடந்து வரும் மோதலால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு கோடி மக்களின் உயிரைக் காப்பாற்ற, மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.

அனைத்துத் தரப்பினரும் உடனடியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் பதற்றங்களைக் குறைக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை நிலைநாட்டவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன். மேலும், பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான மனிதாபிமான உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement