கரிய பெருமாள் கோவில் கரட்டில் தீ

சேலம்: சேலம், நெத்திமேடு கரிய பெருமாள் கோவில் கரட்டில், ஞான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இதன் அருகேயுள்ள பகுதியில், நேற்று மாலை திடீரென காட்டு தீ பற்றியது. முதலில் குறுகிய இடத்தில் எரிந்த தீயானது, காற்றின் வேகத்தால் அப்பகுதி முழுவதும் பரவி எரிந்தது. இதில் செடி, கொடிகள் சாம்பலாயின. இதனால் அப் பகுதி புகை மூட்டமாக காட்சியளித்தது. காட்டு தீயை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.


இதையடுத்து, செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மலைப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பீடி, சிகரெட் துண்டுகளை வீசி சென்றார்களா அல்லது சமூக விரோதிகள் செய்த விஷம செயலா என தெரியவில்லை.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பனியும், மதிய வேளையில் சுட்டெரிக்கும் வெயில் நிலவுவதால், மலையில் உள்ள செடிகளின் இலைகள் காய்ந்து போகிறது.


வெயிலின் தாக்கத்தில் இலைகள், செடிகள் பற்றி எரிந்து தீ பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement