மடப்புரம் அஜித்குமார் மரணம்; டி.எஸ்.பி.,க்கு எதிரான வாரன்ட் ரத்து

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் டி.எஸ்.பி.,க்கு எதிராக பிறப்பித்த பிடிவாரன்ட் உத்தரவை மதுரை மாவட்ட நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

அக்கோயிலுக்கு வந்த பெண் நகை திருடுபோனதாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை 2025 ஜூன் 27 ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இவ் வழக்கை சி.பி.ஐ.,விசாரிக்கிறது. கண்ணன் உள்ளிட்ட 6 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

மானாமதுரை டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார்,ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் பிப்.25 ல் ஆஜராக மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி பிப்.11ல் உத்தரவிட்டார்.

அன்று அந்நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அசன்முகமது விசாரித்தார். ரமேஷ் குமார், சிவக்குமார், இளையராஜா ஆஜராகினர்.

நீதிபதி,'டி.எஸ்.பி.,ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி நேற்று விசாரித்தார்.

டி.எஸ்.பி.,ஆஜராகி பிடிவாரன்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி மனு தாக்கல் செய்தார். இதை அனுமதித்த நீதிபதி மார்ச் 5ல் டி.எஸ்.பி., ஆஜராக உத்தரவிட்டு ஒத்தி வைத்தார்.

Advertisement