தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., சேலம் மத்திய சிறையில் ஆய்வு

சேலம்: தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., சங்கர், சேலம் மத்திய சிறையில், 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறையில் உள்ள அனைத்து தொகுப்புகளையும் பார்வையிட்டார். அத்துடன் சிறை நுாலகம், மருத்துவமனை, பேக்கரி, சமையல் கூடத்துக்கும் சென்று பார்த்தார். கோழிப்பண்ணை, தொழிற்கூடங்களை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை
கேட்டறிந்தார். சிறை பண்பலை நிலையத்தில், சிறைச்சாரல் இன்னிசை குழுவில் உள்ள சிறைவாசிகள் பாடிய பாடலை கேட்டு மகிழ்ந்தவர், அவர்களது கலைத்திறனை பாராட்டி, தொடர்ந்து இதுபோன்ற நற்பணிகளில் ஈடுபட அறிவுறுத்தினார்.


அதன்பின், இரு தண்டனை கைதிகளிடம், தண்டனை குறைப்பு மதிப்பெண் தொடர்பான கோரிக்கை மனுவை பெற்றார். தொடர்ந்து அவரிடம், 50 கைதிகள் கோரிக்கை மனுவும், சிறை பணியாளர்கள், 54 பேர் பணிமாறுதல் கேட்டும் மனு அளித்தனர். அதை பெற்று கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


அதையடுத்து, சேலம் பெண்கள் தனி கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.
சிறைத்துறை ஐ.ஜி., கனகராஜ், கோவை சரக டி.ஐ.ஜி., ஜெயபாரதி, சேலம் சிறை எஸ்.பி., வினோத், சிறை அலுவலர்கள் ராஜேந்திரன், சிவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement