பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு

14


புதுடில்லி: லோக்சபா இன்று (பிப்ரவரி 09) கூடியதும், இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 12 மணி வரை சபையை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.


பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மாதம் 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் அரசின் சாதனைகள், எதிர்கால திட்டங்களை விளக்கி, ஜனாதிபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி உரையின் போதே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அந்த விவாதத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த விடாமல், பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் உச்சமாக, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர், பிரதமரின் இருக்கை அருகே சென்று அவரை நோக்கி கோஷமிட்டனர்.


லோக்சபாவில் பிரதமர் மீது எம்பிக்கள் சிலர் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், பிரதமரின் உரை இடம் பெறாமலேயே லோக்சபாவில் நிறைவேறியது. லோக்சபா நேரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் வீணடித்து வருவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அதிருப்தி தெரிவித்து இருந்தார்.


ஒத்திவைப்பு




இந்த சூழலில் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளன. மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருந்தன. இன்று (பிப்ரவரி 09) கூடியதும், இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை சபையை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.


எம்பிக்கள் முழக்கம்





ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவையில் விவாதிக்க ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டார். தொடர்ந்து மசோதாக்கள் மீதான விவாதம் நடந்து வருகிறது.

Advertisement